டொனால்ட் டிரம்ப், அவர் பதவியேற்ற முதல் வாரத்திலேயே, குறைந்தது நான்கு நிர்வாக ஆணைகளைப் பிறப்பித்தார்.

அமெரிக்காவில் அகதிகளை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைப்பு உள்பட அகதிகள் தொடர்பான பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய செயலாக்க ஆணையில் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் அகதிகளை அனுமதிக்கும் திட்டம் அடுத்த 120 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதுடன் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை சிரிய அகதிகளுக்கு அந்நாட்டில் தடை என்ற உத்தரவும் வெளியிட்டார்.

இந்தத் தடைக்கு எந்தக் கால அவகாசமும் தராமல், உடனடியாய் தடை விதித்ததால், விமானநிலையங்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

பின்னர், ஒரு நீதிபதி, இந்த நிர்வாக ஆணைக்குத் தடை விதித்துவிட்டார்.
நீதிபதிக்கு எதிராக டிரம்ப் ட்விட்டரில் கொதித்தெழுந்தாலும், அமெரிக்காவில், சட்டத்திற்கு முன் அதிபரும் அடங்கித் தான் போக வேண்டும். இந்தியாவில் சட்டம் அரசியல்வாதிகளுக்கு வளைந்து கொடுப்பதுபோல் அங்கு நடக்காது.

இந்நிலையில், தமது முந்தைய ஆணையைச் சிறிது மாற்றம் செய்து மீண்டும் இரண்டாவது நிர்வாக ஆணையை அதிபர் டிரம்ப் கையெழுத்திட உள்ளார்.
இந்த முறை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆறு பிரதானமான முஸ்லீம் நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய 90 நாட்கள் தடை விதித்து புதிய நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.

மேலும், அனைத்து நாடுகளில் இருந்தும் அகதிகள் நுழைய 120 நாள் தடை உத்தரவுவும் மார்ச் 16 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

புதிய நிர்வாகி ஆணையில் என்ன மாற்றம் உள்ளன ??

27 ஜனவரி வழங்கப்பட்ட முந்தையப் பட்டியலில் இருந்த ஆறு நாடுகளான ஈரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் குடிமக்கள், 90 நாட்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழையப் பயணத் தடை.

27 ஜனவரி வழங்கப்பட்டதில் ஒரு நாடான ஈராக் தமது அரசு விசா திரையிடல் மற்றும் தரவுப் பகிர்வை மூறைப்படுத்த உறுதி கூறியதைத் தொடர்ந்து, தடைப்பட்டியலிலிருந்து ஈராக் நீக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய ஆணையில், அமெரிக்க நுழைய ஏற்கனவே வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்த அகதிகள் அமெரிக்காவிற்கு வரலாம். ஆனால், ஒரு ஆண்டிற்கு 50,000 எண்ணிக்கையைத் தாண்டாமல் இருக்கவேண்டுமெனக் கட்டுப்படுத்தி உள்ளது.
புதிய உத்தரவுமூலம், அனைத்து சிரிய அகதிகள்மீது விதிக்கப்பட்ட காலவரையற்ற தடையை நீக்கியுள்ளது.

10 நாட்கள் அவகாசத்துடன் கூடிய முன்கூட்டிய அறிவிப்பு, சென்ற முறை ( ஜனவரி 27) அவகாசம் இல்லாமல் அளிக்கப்பட்ட ஆணையால் அமெரிக்க விமான நிலையங்களில் குழப்பமான காட்சிகள் நிலவியதை சிறிதளவு தவிர்க்க உதவும் என் நம்பலாம். அப்போது, முறையான செல்லுபடியாகும் விசாக்கள் கொண்ட பயணிகள் கூடத் தங்களின் வருகைக்குப் பிறகு எல்லை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீண்ட அலைகழிப்பிற்கு பிறகே விடுவிக்கப்பட்டனர்.

இந்த இரண்டாவது நிர்வாகி ஆணையை நீதிமன்றத்தில் சவால் விடுக்க முடியாமா ?
முடியும். இதற்கான ஆயத்தப் பணிகளில் பல அமைப்பினரும் இறங்கியுள்ளனர். நியூயார்க் அட்டர்னி ஜெனரல் எரிக் ஸ்னெய்டெர்மேன் ( Eric Schneiderman) – மாநிலத்தின் உயர்ந்த பதவியில் உள்ள சட்ட அமலாக்க அதிகாரியான இவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அவரது அலுவலகம் டிரம்ப் நிர்வாகம்மீது நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளது என்று கூறியுள்ளது.

“வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தடை உத்தரவில் சிறிது மாற்றம் உள்ளபோதும், முஸ்லிம்களுக்கு எதிராக வேற்றுமையைக் காட்டும் நோக்கம் தெளிவாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், அமெரிக்க-அரபு பாரபட்ச ஒழிப்புக் குழு (ADC) எனும் அரபு-அமெரிக்க அடிமட்ட சிவில் உரிமைகள் அமைப்பு, டிரம்ப்பிற்கு எதிரான சட்ட போராட்டங்களுக்கு நன்கொடைகள் கேட்டு அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்க அதிபரின் நிர்வாக ஆணைகள் என்பது இந்தியாவில் பிறப்பிக்கப் படும் அவரசச் சட்டம் போன்றதாகும். ஒரு மசோதாவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆலோசனையைக் கேட்காமல் அதிபர் அறிவிப்பதாகும்.

உதாரணத்திற்கு, தமிழக சட்டசபையில், 110 விதியின் கீழ் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதுகுறித்து உறுப்பினர்கள் கேள்வி கேட்க முடியாது. ஆனால், அமெரிக்காவில், நீதிமன்றத்தில் அதிபரின் நிர்வாக ஆணைகளுக்குத் தடை வாங்க முடியும்.

நிர்வாக ஆணை என்பது, அதிபர், மத்திய அரசுக்குப் பிறப்பிக்கும் எழுத்துபூர்வமான உத்தரவு; இதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படாது.
இந்த உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் அமெரிக்க அரசியல் சட்டத்தின் இரண்டாவது ஷரத்திலிருந்து பெறப்படுகிறது. ” நிர்வாக அதிகாரம் அமெரிக்க அதிபரிடம் இருக்கும்”, என்று இந்த ஷரத்து கூறுகிறது.

போர்க்காலங்களின் போதோ அல்லது உள்நாட்டு நெருக்கடியைத் தவிர்க்கவோ, நிர்வாக ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அதிபரைச் செயல்பட அனுமதிக்கின்றன என்பதால், நிர்வாக ஆணைகள் சர்ச்சைக்குரியவையாகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிக மெதுவாகச் செயல்படும் போது அல்லது அதிபர் ஒரு புதிய சட்டத்தின் சாராம்சத்தை எடுக்க வேண்டும் என்று அதிபர் எண்ணினாலோ நிர்வாக ஆணையைப் பிறப்பிக்கலாம்.

பராக் ஒபாமா நிர்வாக ஆணைகளை அபூர்வமாகத்தான் பயன்படுத்தினார். ஒபாமா, நிர்வாக ஆணை அதிகாரத்தைப் பயன்படுத்தி, சுகாதாரம், ஒருபாலுறவினர் உரிமைகள் போன்ற விஷயங்களில் உத்தரவுகளைப் பிறப்பித்தபோது, அவர் தன் அதிகார வரம்பை மீறுகிறார் என்று குற்றம் சுமத்திய குடியரசுக் கட்சியினர், இப்போது ஒபாமாகேர் என்ற அந்தச் சுகாதாரத் திட்டத்தை விலக்கிக்கொள்ள, டொனால்ட் டிரம்ப் அதே யுக்தியைப் பயன்படுத்தியபோது பாராட்டியிருக்கிறார்கள்.

டிரம்ம்பின் நிறவெறிக் கொள்கைகளால், இந்தியர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியர்கள்மீது கொலைவெறித்தாக்குதல் நடைபெற்று வருகின்றது.
நமது பிரதமர் அமெரிக்காவைக் கண்டித்து அறிக்கை விடுவாரென எதிர்பார்ப்பது தவறு. அவருக்கு ராகுல்காந்தி மீதும் முஸ்லிம்கள்மீதும் துவேசப் பேச்சைப் பேசவே நேரம் போதவில்லை.