545 மரங்களை வெட்டிச் சாய்த்துத் தங்கும் விடுதி கட்டுவதா?

Must read

சென்னை:

“திருவண்ணாநலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்காக 545 மரங்களை வெட்டிச் சாய்த்துத்
தங்கும் விடுதி கட்டுவதா?” என்று தமிழக அறநிலையத்துறைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ஆணாயப் பிறந்தான் கிராம எல்லையில் உள்ள சோணநதிதோப்பில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் 27.02.2017 அன்று அரசு ஆணை பிறப்பித்து உள்ளார். அதற்காக அங்கே உள்ள 545 மரங்களை வெட்டி அகற்றவும் அனுமதி அளித்துள்ளார். பக்தர்கள் தங்கும் விடுதி அமைப்பதற்கு ஏற்ற வேறு பல இடங்கள் இருக்கும்போது, கிரிவலப் பாதையில் உள்ள பசுஞ்சேலையான சோணநதித் தோப்பு வனத்தை அழிக்க முற்படுமவது ஏன்? என்று திருவண்ணாமலை பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏற்கனவே இது தொடர்பான வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் மார்ச் 28 ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், அவசர அவசரமாக இந்து சமய அறநிலையத்துறை, சோணநதித் தோப்பு மரங்களை அழித்து அங்கு தங்கும் விடுதி அமைக்க அனுமதி அளித்துள்ளது எதற்காக?

சோணநதித் தோப்பில் வில்வமரம், கடம்பை மரம் உள்ளிட்ட தல விருட்சங்கள் அனைத்தும் மிகப் பழமையானவை. இந்த வனத்தில் அரிய வகைப் பறவைகளும், மயில்களும், முள்ளம் பன்றிகள், மான்கள், தேவாங்கு, மரநாய்கள் போன்ற உயிரினங்களும் இருக்கின்றன. நாட்டு மரங்கள் நிறைந்த சோணநதித் தோப்பு வனத்தை அழிப்பதன் மூலம் சுற்றுச் சூழலும், உயிர்ச் சூழல் சங்கிலியும் அழிந்துவிடும் என்பது இந்து சமய அறநிலையத்துறை அறியாததா?

ஆளும் கட்சியினர் சிலரின் தலையீடு இதில் இருப்பதால், அரசு உயர் அதிகாரிகள், விதி மீறல்களை பொருட்படுத்தாமல், பாதுகாக்கப்பட்ட பசுமைப் பகுதியை அழிப்பதற்குத் துணை போகின்றன.

தமிழக முதலமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் அரசு ஆணையைத் திரும்பப் பெற வேண்டும். சோணநதித் தோப்பில் உள்ள மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும். அருணாசலேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான வேறு இடத்தில் பக்தர்கள் தங்கும் விடுதியை அமைத்திட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்” –  இவ்வாறு தனது அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

More articles

Latest article