கொல்கத்தா:

தேசிய நினைவுச்சின்னமாக  டெல்லி செங்கோட்டையை பராமரிக்க, தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதற்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

வரலாற்று  சிறப்பு மிக்க கோட்டையை நிர்வகிக்க மத்திய அரசால் இயல வில்லையா? என்றும் மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்

இந்தியாவின் பாரம்பரிய நினைவு சின்னங்களை பராமரிக்கும் பணியை, தனியாருக்கு மத்திய அரசு வழங்க தீர்மானித்து உள்ளது. அதன்படி,   நாட்டில் உள்ள 105 நினைவுச் சின்னங்களை பராமரிக்கும் பணியை தனியாரிடம்  ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி முதன்முதலாக, இந்தியாவின் பாரம்பரிய நினைவுச்சின்னமான  டில்லி செங்கோட்டையை, டால்மியா நிறுவனத்துக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது.

இதற்காக, ஒரு ஆண்டுக்கு பராமரிப்பு செலவாக ரூ.5 கோடி வீதம் 5 ஆண்டுக்கு 25 கோடி ரூபாயை மத்திய அரசு டால்மியா நிறுவனத்துக்கு வழங்கும்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசின் இந்த முடிவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
செங்கோட்டை என்பது தேசிய அடையாளம் என்றும் அதை தனியார் பராமரிக்க அனுமதித்தது நாட்டின் கறுப்பு நாள் என்று கூறி உள்ளார். மேலும் வரலாற்று  சிறப்பு மிக்க கோட்டையை நிர்வகிக்க மத்திய அரசால் இயல வில்லையா? என்றும் மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்