டில்லி

ந்தியா முழுவதும் மின்சாரம் முழுமையாக வந்து விட்டதாக செய்தி வரும் நிலையில் இன்னும் பல கிராமங்கள் இருளில் உள்ளதாக “தி இந்து” செய்தி ஊடகம் தெரிவிக்கிறது.

சமீபத்தில் இந்தியாவின் கடைசி மின் வழங்கும் நிலையம் திறக்கப்பட்டு விட்டதாகவும் அதன் மூலம் இந்தியா முழுவதும் மின்சார வசதிகள் வந்துள்ளதாகவும் செய்திகள் வந்தன.   பிரதமர் மோடி கடந்த 2015 சுதந்திர தினத்தில் அன்றிலிருந்து 1000 தினங்களுக்குள் நாடு முழுவதும் மின்சாரம் கிடைக்க வழி செய்யப்படும் என அறிவித்தார்.  அதன் படி கடைசி மின் வழங்கும் நிலையமும் அறிவித்த கெடுவுக்கு முன்னரே திறந்து விட்டதாகவும் இணைய பாஜக தொண்டர்கள் பதிவிடுகின்றனர்.

ஆனால் “தி இந்து” செய்தி ஊடகம் நாட்டின் பல பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை என செய்திக் கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளது.  அந்தக் கட்டுரையில், “கடந்த வருடம் நாட்டில் முழு மின்சாரம் அளித்துள்ளதாக அறிவிக்கப் பட்ட கிராமங்களில் உத்திரப் பிரதேசம் ஹால்து கடா கிராமமும் ஒன்று.  ஆனால் அரசு தகவலின் படி இங்கு மின்சாரம் வழங்கப்படவில்லை.  இதே நிலையில் பல கிராமங்கள் உள்ளன. அசாம், சத்தீஸ்கர், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இன்னும் பல கிராமங்கள் மின்சாரம் இன்றி இருளில் உள்ளன.

எந்தெந்த கிராமங்களில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதற்காக ஒரு மொபைல் செயலி ஒன்று கடந்த 2015ஆம் வருடம் அக்டோபர் மாதம் நிறுவப்பட்டது.   ஆனால் இந்த செயலியில் மின்சாரம் வழங்கப்பட்டதாக குறிப்ப்டிஅப்பட்ட பல கிராமங்களுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை.   இதுவரை “தி இந்து” அதுபோல் சுமார் 30 கிராமங்களை கண்டறிந்துள்ளது.   இது குறித்து மின் அதிகாரிகள் அந்தக் கிராமங்களில் மின்சாரக் கம்பி சென்றாலோ அல்லது மின் வழங்கும் கோபுரம் இருந்தாலோ மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக நாங்கள் எடுத்துக் கொள்வோம் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மத்தியப் பிரதேசம் பகாரா புசுர்க் கிராமத்தில் கம்பம் நட்ட பின் அதிகாரிகள் கிராமத்துக்கு மின்சாரம் இணைப்புகள் வந்து விட்டதாக கணக்கில் காட்டி விட்டனர்.   ஆனால் மின் கம்பிகள் திருட்டுப் போனதால் கிராமத்துக்குள் மின்சார கம்பிகள் பதிக்கப்படவில்லை என்பதை அதிகாரிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.   அதுமட்டுமின்றி மத்தியப் பிரதேசங்களில் ஆட்களே வசிக்காத பல கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கணக்குகள் காட்டப்பட்டுள்ளன.   உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சில ஆட்கள் நுழைய முடியாத வனப்பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக  கூறப்பட்டுள்ளது.” என கூறப்பட்டுள்ளது.