கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (வி.எஸ்.எஸ்.சி) நடத்திய தொழில்நுட்ப பணியாளர் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ஒரு முக்கிய விண்வெளி ஆராய்ச்சி மையமான வி.எஸ்.எஸ்.சி நடத்திய இந்த பணியாளர் தேர்வு கேரளாவில் உள்ள 10 மைய்யங்களில் நடைபெற்றது.

இந்த தேர்வு எழுத ஹரியானா மாநிலத்தில் இருந்து மட்டும் 469 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அங்கிருந்து 400 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர்.

ஒரே மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் விண்ணப்பித்திருந்ததை அடுத்து தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற இரண்டு பேர் கையும் களவுமாக சிக்கினர் இவர்களைத் தவிர முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இஸ்ரோ தொழில்நுட்ப தேர்வில் முறைகேடு செய்வது குறித்து பயிற்சி மைய்யங்கள் அமைத்து செயல்பட வாய்ப்பிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனை அடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள கேரள போலீசார் ஹரியானா மாநிலத்திற்கு குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நிலவை எட்டிப்பிடிக்கும் இடத்தில் இருக்கும் நிலையிலும் இஸ்ரோ தேர்வில் முறைகேடு செய்ததாக ஒரே மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் கேரளா மட்டுமன்றி பிற மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.