டெல்லி: குடியரசு தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளருக்கு எதிராக களமாட, எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அதன் அடுத்தக்கட்டமாக  பொதுவேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, ஒத்தகருத்துக்கள் எதிர்க்கட்சிகளிடையே பேசி வரும் கார்கே, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை  நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவின் 75 ஆண்டு கால வரலாற்றில், தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உட்பட 14 பேர் ஜனாதிபதியாக இருந்துள்ளனர். 15வது குடியரசு தலைவராக வரப்போவது யார் என்பது குறித்து மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே வேளையில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் குடியரசு தலைவர் வேட்பாளரை நிறுத்துவதில் மெனக்கெட்டு வருகிறது.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைவதால்,  வேட்பாளர்கள் அறிவிப்பது குறித்து கட்சிகளிடையே ஆலோசனை தொடங்கியுள்ளது. இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் தேதியை  நேற்று அகில இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அறிவித்தது. அதன்படி,  குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 21ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் குறித்து ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளளார். இதைத்தொடர்ந்து,  ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவரான கார்கே, என்சிபி தலைவர் சரத் பவாரை  அழைத்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஒத்த கருத்துள்ள அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளதாக  கூறியதுடன்,  அவரது வழிகாட்டு தலைத் தொடர்ந்து, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவரான கார்கே, என்சிபி தலைவர் சரத் பவாரை  அழைத்துப் பேசியதாக தெரிவித்தார். தங்களது யோசனையை சரத்பவார் ஆதரித்துள்ளர் என்றும் கூறினார்.

தொடர்ந்து, கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பினோய் விஸ்வம் எம்.பி.யிடம் பேசியுள்ளார். இந்த தகவலை பினோய் விஸ்வம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் குடியரசு தேர்தளுக்கான பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சியிடம் இருந்தோ, பிற எதிர்கட்சிகளிடம் இருந்தோ எந்த தகவலும் வரவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்த எலக்டோரல் காலேஜ் எனும் தேர்தல் குழு  தான் தேர்ந்தெடுக்கும். குடியரசு தலைவர் தேர்தலில் மக்களவை எம்.பி.க்கள் 543 பேர், மாநிலங்களவை எம்.பி.க்கள் 233 பேர், மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்கள் 4,033 பேர் என மொத்தம் 4,809 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வேட்பாளரின் வேட்புமனு ஏற்கப்படுவதற்கு, 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது எம்எல்ஏக்கள் வேட்பாளரை முன்மொழிய வேண்டும். தேர்தல் ஆணையம் வழங்கும் பேனா மூலம்  மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு 708 ஆகும்.  தற்போதைய நிலையில், மக்களவை, மாநிலங்களவையும் சேர்த்து 776 எம்.பி.க்கள் இருக்கின்றனர். அவர்களின் மொத்த வாக்குகளின் மதிப்பு என்பது 5 லட்சத்து 43 ஆயிரத்து 700 ஆகும்.

நாடு முழுவதும் தற்போது 4,033 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால், இவர்களின் வாக்குகளின் மதிப்பு என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.  அதாவது, மாநிலத்திலுள்ள மக்கள்தொகையின் அடிப்படையில்தான், எம்.எல்.ஏ.க்களின் வாக்கு  மதிப்பிடப்படுகிறது. உதாரணத்திற்கு, உத்தரபிரதேசத்தில் ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 208 என்றால், அது கோவா போன்ற சிறிய மாநிலத்தில், 20 தான். அந்தவகையில், தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டுமதிப்பு 176.  தற்போதைய நிலையில், அனைத்து மாநில எம்.எல்.ஏ.க்களின் மொத்த வாக்குகளின் மதிப்பு, 5 லட்சத்து 42 ஆயிரத்து 731 ஆகும்.

அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஒட்டுமொத்த ஓட்டுமதிப்பு 10 லட்சத்து 86 ஆயிரத்து 431ஆகும். இதில், 50 சதவீதத்துக்கு மேல் பெறுபவர்தான் ஜனாதிபதியாக முடியும்.

ஆனால், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, தற்போதைய நிலையில், 49 சதவீத வாக்குகள்தான் உள்ளன. எனவே, ஒருசதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற எதிர்க்கட்சிகள் அல்லது கூட்டணியில் இல்லாத கட்சிகளில் ஏதேனும் ஒன்றின் ஆதரவு மிக முக்கியம். அதைப் பெறுவதற்கான கணக்குகள்தான் தற்போதே தொடங்கிவிட்டன.

பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகள் அனைத்தையும் சேர்த்து பொது வேட்பாளரை அறிவிப்பது குறித்து காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தேசியவாத கட்சியைச்சேர்ந்த இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சரத் பவாரை நிறுத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல்கள் பரவுகின்றன.

அதுபோல, பாஜக சார்பில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தலைநகர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ராம்நாத்தை அறிவித்ததுபோல, இந்த முறை ஒரு இஸ்லாமியர் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மக்களிடையே சாதி, மதம் அற்றது  பாஜக என்ற பெயரை உருவாக்கும் முயற்சியில், ஜார்க்கண்ட மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த பழங்குடியைச் சேர்ந்த த்ருபதி முர்மு-வை (Draupadi Murmu) குடியரசு தலைவர் தேர்தலில் நிறுத்த வாய்ப்பு உள்ளதாகவும் அல்லது, இஸ்லாமியரான கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கானை (Arif Mohammed Khan) வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.