டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புக்கு காலியாக உள்ள இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு கிடையாது என  உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதுதொடர்பாக மருத்துவர்கள், மாணவர்கள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில்  முதுநிலை மருத்துவ படிப்புக்கு காலியாக உள்ள 1,456 இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தி நிரப்ப வேண்டும் என மருத்துவ படிப்பு மாணவர், மருத்துவர்கள் என பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு, உச்சநீதிமன்ற விடுமுறைக் கால சிறப்பு அமர்வு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த விசாரணைகளின்போது,  1,456 மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டிக்கு தனது கண்டனங்களை தெரிவித்துடன், மாணவர்களுக்கு அவர்களுக்கான இடங்கள் உரிய முறையில் ஒதுக்கித் தரப்படவில்லை என்றால் நீதிமன்றமே அதனை செய்ய நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து பிரமான பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம், முதுநிலை மருத்துவ படிப்புக்கு காலியாக உள்ள இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு கிடையாது என தீர்ப்பு வழங்கி உள்ளது. சிறப்பு கலந்தாய்வு நடத்த உத்தரவிடக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.

தீர்ப்பில்,  ஏற்கனவே 8-9 சுற்றுகள் கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும், மருத்துவக் கல்வி மற்றும் பொது சுகாதார நலன் கருதி புதிதாக கவுன்சிலிங் நடத்த வேண்டாம் என்ற முடிவு தன்னிச்சையானது அல்ல என்றும்  மருத்துவக் கல்வி மற்றும் பொது சுகாதார நலன் கருதி என்றும் நீதிமன்றம் கூறியது.