மும்பை: மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமைச்சர் தேஷ்முக் தனது ராஜினாமாவை முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு  அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் உத்தவ்தாக்கரே தலைமையில் கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. மாநில அரசின் உள் துறை அமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனில் தேஷ்முக் உள்ளார். இவர் மீது  மும்பை காவல்அதிகாரியிடம், மாதம் ரூ.100 கோடி மாமுல் வசூலித்து தர வேண்டும் என்று கூறியதாக, மும்பை காவல் ஆணையராக இருந்த பரம்பீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், இதுகுறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என  நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 இதையடுத்து, அனில் தேஷ்முக் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்துவருகின்றன. இந்த நிலையில் அனில்தேஷ் மீதான வழக்கு இன்று மும்பை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், அனில் தேஷ்முக் மீதான ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான விசாரணையை சிபிஐ அடுத்த 15 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதைத்தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்த முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அனுப்பி உள்ளார்.