மும்பை: மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வராக கடந்த வாரம் பதவி ஏற்ற சிவசேனா கட்சியின் அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார். அவருக்கு 164 உறுப்பனிர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 3 பேர் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தனர்.

இவர்களில், மகாராஷ்டிரா சட்டசபையின்  மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை  288 ஆகும். ஒரு உறுப்பினர் இறந்துவிட்டதால் தற்போதைய பலம் 287.  சிவசேனா 55, என்சிபி 53, காங்கிரஸ் 44, பாஜக 106, பகுஜன் விகாஸ் அகாடி 3, சமாஜ்வாதி கட்சி 2, ஏஐஎம்ஐஎம் 2, பிரஹர் ஜனசக்தி கட்சி 2, எம்என்எஸ் 1, சிபிஐ (எம்) 1, பிடபிள்யூபி 1 , ஸ்வாம்பிமணி பக்ஷா 1, ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா 1, ஜான்சுராஜ்ய சக்தி கட்சி 1, கிராந்திகாரி ஷேத்காரி கட்சி 1, மற்றும் சுயேச்சைகள் 13 உறுப்பினர்கள்.

உத்தவ்தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசை எதிர்த்து, சிவசேனா கட்சியின் 80 சதவிகித எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் உத்தவ்தாக்கரே அரசு கவிழ்ந்தது. இதையடுத்து பாஜக ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே மாநில முதல்வராக கடந்த வாரம் பதவி ஏற்றார். இதையடுத்து இன்று பெரும்பான்மை நிரூபிக்க கவர்னர் கோஷ்யாரி உத்தரவிட்டிருந்தார்.

ஆட்சி அமைக்க மெஜாரிட்டிக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.  இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில், சிவசேனா அதிருப்தி- பா.ஜனதா கூட்டணி அரசு மெஜாரிட்டிக்கு கூடுதலாக 20 ஓட்டுகள் பெற்று சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து இன்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்தார்

அதன்படி இன்று சட்டமன்றம் கூடியது. அதில் முதல்வர் ஷிண்டே தனக்கு ஆதரவு அளிக்கும்படி உறுப்பினர்களிடையே நம்பிக்கை கோரினார். அதைத்தொடர்ந்து  சபாநாயகர் வாக்கெடுப்பதை நடத்தியது. முன்னதாக,   உத்தவ் தாக்கரே கோஷ்டியைச் சேர்ந்த மற்றொரு சிவசேனா எம்எல்ஏ சந்தோஷ் பங்கர் இன்று  ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது கோஷ்டி எம்எல்ஏக்களுடன் காணப்பட்டார். ஏற்கனவே 39 சிவசேனா எம்எல்ஏக்கள் மற்றும் 10 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்த நிலையில், மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு ஷிண்டேவுக்கு கிடைத்து. அத்துடன் பாஜக உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் உதிரி கட்சிகள், சுயேச்சைகள் என ஏக்நாத் ஷிண்டேவுக்கு 164 வாக்குகள் கிடைத்தன. இதனால் ஷிண்டே தனது முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொண்டார்.

பெரும்பான்மை நிரூபிக்க  144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற வகையில், கூடுதலா 20 எம்எல்ஏக்களின் வாக்குகள் ஷிண்டேவுக்கு கிடைத்துள்ளது.