மும்பை:

காராஷ்டிரா மாநில அமைச்சரவை கடும் இழுபறிக்கு பின்பு இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில், துணை முதல்வராக, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் மற்றும் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே உள்பட 36 பேர் அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத கூட்டணி கடந்த நவம்பர் 28ந்தேதி ஆட்சி அமைத்துள்ளது. மாநில முதல்வராக உத்தவ்தாக்கரே இருந்து வருகிறார். அவருடன் மேலும் 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

இதையடுத்து, சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக, கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. சுமார் 32 நாட்கள் இழுபறிக்குபிறகு, சமீபத்தில் அமைச்சரவை குறித்து இறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து,  இன்று மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.  அதன்படி, துணைமுதல்வர், கேபினட் மற்றும் துணை மந்திரிகள் என மொத்தம் 36 பேர் பதவியேற்றனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் அசோக் சவான் கேபினட் அமைச்சரானார். அவருடன், சிவசேனாவின் வாரிசான உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யதாக்கரே உள்பட , தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் திலிப் வால்சே, தனஞ்செய் முண்டே, காங்கிரஸ் கட்சியின் விஜய் வதேட்டிவார் உள்பட 25 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 10 பேர் துணை அமைச்சர்களாகவும்  பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.