சென்னை: மகளிர் உரிமை தொகை மேல்முறையீட்டில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ.1000 அனுப்பும் பணி இன்று சோதனை முறையில் தொடங்கி உள்ளது.

சென்னையில் கலைவாணர் அரங்கில் நாளை (10ந்தேதி) நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிருக்கு ரூ.1000 வழங்கும் 2-ம் கட்ட விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ள நிலையில், தேர்வான தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு இன்றுமுதல் பணம் அனுப்பும் பணி தொடங்கி உள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம்  அண்ணா பிறந்தநாளான  செப்டம்பர் 15-ந்தேதி  முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு,  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி  1கோடியே 6லட்சத்து 50ஆயிரம் பேருக்கு மாதந் தோறும் ரூ.1000 பெற்று வருகின்றனர்.

இந்த உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தவர்களில்  பல லட்சம்  பேரின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மேல்முறையீடு செய்ய லாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.  அதைத்தொடர்ந்து,   11 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களுக்கும் ரூ.1000 பணம் வழங்க வேண்டும் என்று கேட்டு மேல்முறையீடு செய்திருந்தனர். இதில் தகுதியான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டுள்ள தகுதி படைத்த மகளிருக்கு வருகிற 10-ந்தேதி ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இதுதொடர்பான விழா வரும் 10ந்தேதி நடைபெறும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் நாளை கலெக்டர் தலைமையில் விழா நடத்த அறிவுறுத்தப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

வரும் ஞாயிற்றுக்கிழமை (12-ந்தேதி ) தீபாவளி பண்டிகை வருவதையொட்டி தேர்வு செய்ப்பட்டுள்ள அனைத்து மகளிருக்கும்  10-ந்தேதி அவரவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், இன்று சோதனை அடிப்படையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மகளிருக்கு ரூ.1000 அனுப்பும் பணி தொடங்கியது. இதனால் மேல்முறையீடு செய்திருந்த குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.