கோவை: பிரபலமான கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்த  7 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கோவை அவிநாசி சாலையில் இயங்கி வரும் பிஎஸ்ஜி கல்லூரியில் படிக்க கூடிய முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை கடந்த 6ஆம் தேதி அதே கல்லூரியில் ஹாஸ்டலில் படிக்கும் மாணவர்கள் சிலர் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. அப்போது அந்த மாணவர் பணம் தர மறுக்கவே 7 சீனியர் மாணவர்களும் சேர்ந்து முதலமாண்டு மாணவருக்கு மொட்டை அடித்து துன்புறுத்தியது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் மாணவரின் பெற்றோருக்கு தெரியவரவே காவல்துறையில் அளித்த புகாரின்பேரில் 7 மாணவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  அதன்படி,  சீனியர் மாணவர்கள் மாதவன், மணி, வெங்கடேஷ், தரணிதரன், ஐயப்பன், சந்தோஷ் மற்றும் யாலிஸ் ஆகிய ஏழு மாணவர்களை பீளமேடு காவல்துறையினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் 7 பேரையும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில்  வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கு ராகிங் பிரச்னை உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.