மதுரை முக்குறுணிப் பிள்ளையார் கோயில்
முக்குறுணிப் பிள்ளையார் சன்னிதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைந்துள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதிக்கும் சுந்தரேஸ்வரர் சன்னதிக்கும் இடையே கிளிக்கூண்டு மண்டபத்துக்கு வடக்குப் புறம் அமைந்துள்ளது. இந்த பிள்ளையார் சிலை மிகப் பெரியது. பத்தடி உயரமிருக்கலாம்.
மதுரை முக்குறுணிப் பிள்ளையார் வரலாறு
திருமலைநாயக்கர் மன்னர், அரண்மனை கட்டுவதற்காக மண் எடுக்க தற்போதுள்ள தெப்பக்குளம் பகுதியில் தோண்டினார். அப்போது பூமிக்கு அடியில் 8 அடி உயரத்தில் 4 கரங்களுடன் அமர்ந்த நிலையில் விநாயகர் உருவச் சிலை மண்ணில் புதைந்து கிடந்தது. அந்த சிலையை அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்குச் செல்லும் வழியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
மீனாட்சி அம்மனை தரிசனம் செய்யச் செல்பவர்கள் இந்த பிள்ளையாரைத் தரிசனம் செய்யாமல் போக முடியாது. இந்த பிரம்மாண்ட விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு வெள்ளியால் ஆன கவசம் அணிவிக்கப்படும். பின்னர் உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு மாபெரும் கொழுக்கட்டை படைக்கப்பட்டுச் சிறப்பு பூஜை நடைபெறும்.
விநாயக சதுர்த்தி கொழுக்கட்டை
விநாயக சதுர்த்தி மீனாட்சி அம்மன் கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வின்போது இந்த முக்குறுணிப் பிள்ளையாருக்கு மிகப் பெரிய ஒற்றைக் கொழுக்கட்டையைப் படைக்கிறார்கள். இந்தக் கொழுக்கட்டை செய்வதற்கு மூன்று குறுணி அரிசி பயன்படுத்தப் படுகிறதாம்.
குறுணி என்பது பண்டைய பாண்டிய நாட்டு முகத்தலளவை ஆகும். அதாவது ஒரு குறுணி என்பது நான்கு படிகள். மூன்று குறுணி என்றால் 12 படிகள். பிள்ளையாருக்குப் படைக்கப்பட்ட பின் கொழுக்கட்டை பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்கப் படுகிறது.
மூன்று குறுணி அரிசியை மாவாக இடித்து, அதில் ஒரே கொழுக்கட்டையாகச் செய்து, விநாயக சதுர்த்திக்குப் படைப்பதால் இந்தப் பிள்ளையாரை ‘முக்குறுணிப் பிள்ளையார்’ என்கின்றனர்