சென்னை

விநாயக சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறைக்குச் சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப 700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து சனி, ஞாயிறு என இரு தினங்களும் விடுமுறை என்பதால் இந்த தொடர் விடுமுறைக்காகச் சென்னையில் இருந்து சுமார் 1.5 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.   இன்று மீண்டும் பணிக்குச் செல்ல வசதியாக நேற்று மதியம் முதல் மக்கள் சென்னைக்குத் திரும்பி வரத் தொடங்கினர்.

நேற்று மாலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் தொடங்கியது.  மேலும் மக்களின் தேவைக்காகத் திருச்சி, மதுரை, நெல்லை, கோவை கடலூர், கும்பகோணம் உள்ளிட்ட பல  பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு சுமார் 700 சிறப்புப் பேருந்துகள் இயக்கபட்டன.  இவை அனைத்தும் ஒரே நேரத்தில் நகருக்குள் வந்ததால் பெருங்களத்தூர், பூந்தமல்லி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்தது.

அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர், ”கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு இந்த தொடர் விடுமுறையில் அதிகமான மக்கள் அரசு பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் விடுமுறை முடிந்து சென்னைக்கு மீண்டும்வரத் தொடங்கியுள்ளனர். அவர்கள் தேவைக்கு ஏற்ப,பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 700-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறோம். ” என்று கூறி உள்ளார்.