துரை, கோவில்கள் மற்றும் திருவிழாக்களின் நகரமாகும். இந்நகரம் கூடல் மற்றும் ஆலவாய் என அழைக்கப்படுகிறது.

தமிழ் புலவர்களால் மூன்றாம் மற்றும் கடைசி சங்கம் நிறுவி தமிழாய்ந்த இடமாகும். பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகும், வைணவம் மற்றும் சைவம் தலைத்தோங்கிய நகரமாக மதுரை திகழ்கிறது. உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகாலையில் பாடப்படும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு” என்ற திருப்பல்லாண்டு பாடல் இயற்றப்பட்ட தலம் மதுரை.

சைவத்திற்கு அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவிலும், வைணவத்திற்கு அருள்மிகு கூடலழகர் திருக்கோவிலும் சிறப்புற்று விளங்குகிறது. அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோவில், வைணவ பாடல் பெற்ற தலங்களான 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடப்பெற்ற தலமாகும், திருமங்கையாழ்வார் மற்றும் திருமழிசைபிரான் ஆகியோர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.

பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரருக்கு, பெருமாளை அர்ச்சாவதார (மனித ரூபம்) வடிவில் தரிசிக்க வேண்டுமென ஆசை எழுந்தது. தன் விருப்பம் நிறைவேற, இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அவருக்குக் காட்சி தந்தார். பின்பு சனத்குமாரர், தேவசிற்பி விஸ்வகர்மாவை வரவழைத்து தான் கண்ட காட்சியை அப்படியே வடிவமைக்கச் செய்தார். அதை மிக அழகிய அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டை செய்தார். அவரேகூடலழகர் எனப்பட்டார். இத்தலம் கிருதயுகத்திலேயே அமைக்கப்பட்டுவிட்டது. கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்களிலும் சிறப்புற்று விளங்குகிறது. எனவே இத்தல பெருமாள் யுகம் கண்ட பெருமாள் எனப்படுகிறார். இத்திருக்கோவிலுக்குச் சொந்தமான பெருமாள் தெப்பக்குளம், மதுரை டவுன்கால்ரோட்டில் உள்ளது. கோவிலிலிருந்து அரை கி.மீ. தொலையில் உள்ளது. பிரதி வருடம், மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று தெப்ப உற்சவம் நடைபெறும்.