சென்னை: சென்னையில் உள்ள புழல் சிறையில் ஆய்வு நடத்திய நீதிபதி சுப்பிரமணியம், அங்கு வசதிகளை மேம்படுத்தவும், சிறை கைதிகளுக்கு தாம்பத்ய உரிமம் வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் என்றும் வலியுறுத்தினார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், திருவள்ளூர் மாவட்ட போர்ட்ஃபோலியோ நீதிபதி ஆகியோர் கடந்த 8ம் தேதி, பசென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறையில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அங்குள்ள கைதிகளிடம் தேவைகள் மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். இதைத்தொடர்ந்து ஜூலை 25ந்தேதி நீதிபதிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக சட்டப் பணிகள் ஆணைய குழு உறுப்பினர் செயலர் நசீர் அகமது, திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.செல்வசுந்தரி, சிறைத் துறை டி.ஜி.பி., அம்ரேஷ் பூஜாரி மற்றும் சிறைத் துறை டி.ஐ.ஜி.,க்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- புழல் மத்திய சிறையில் கைதிகளை பார்வையிட வருவோர் அமரும் அறையில், கூடுதல் மின்விசிறி, கூடுதலாக பார்வையாளர் அறை வசதி ஏற்படுத்த வேண்டும்;
- சிறைக்கு வரும் பெண் பார்வையாளர்கள், பெண் வழக்கறிஞர்களுக்கு போதிய கழிப்பறை வசதிகள் இல்லை; ஏற்கனேவே உள்ள ஆண் பார்வையாளர்களுக்கான கழிப்பறைகள் சுகாதாரமற்று காணப்படுகின்றன. அதேபோல, சிறையில் உள்ள கழிப்பறைகளும் சுகாதாரமற்ற முறையில் உள்ளன; அவற்றை நாளொன்றுக்கு இரு முறை சுத்தப்படுத்த வேண்டும்.
- சிறைக் கைதிகளுக்கு, கூடுதல் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதற்கான நிதியை, உடனே அரசு வழங்குவதோடு, கழிப்பறைகளை சுத்தம் செய்ய பயன்படும் பொருட்களையும் வழங்க வேண்டும்.
- சிறையில் உள்ள ஜன்னல்களில், தரமான கொசு வலை அமைப்பதோடு, சிறை உணவகங்களை சுத்தமாக வைத்திருப்பதோடு, தரமான உணவு வழங்குவது அடிப்படை உரிமை.
- சிறையில் தாயுடன் இருக்க அனுமதிக்கப்பட்ட ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு, சத்தான உணவுகள் வழங்குவதுடன், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த மழலையர் பள்ளிகளை துவக்க வேண்டும்.
- சிறைக்கு வரும் வழக்கறிஞர்கள், பார்வையாளர்களுக்கு, ‘லாக்கர்’ வசதி ஏற்படுத்த வேண்டும்.
- சிறைக் கைதிகளுக்கு, உயிர் காக்கும் மருந்துகளை தடையின்றி வழங்குவதை, சுகாதாரத் துறை செயலர் உறுதி செய்ய வேண்டும். அவை தடையின்றி வழங்கப்படுகிறதா என்பதை, சுகாதாரத் துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
- நீதிமன்ற ஜாமின் கிடைத்தும், பிணைய தொகை செலுத்த முடியாத காரணத்தால், சிறையில் தொடர்ந்து இருக்கும் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சட்ட விதிகளுக்கு மாறாக, சிறையில் அதிகளவில் காவலர்களை பணி அமர்த்தக் கூடாது; சட்டத்துக்கு மாறாக சிறைக் கைதிகளை துன்புறுத்தல், கூடுதல் தண்டனைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
- சட்ட உதவிகள் கிடைக்காத கைதிகள் குறித்த விபரங்களை, சட்டப் பணிகள் ஆணைய குழு சேகரித்து, உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
- தொழிலாளர் சட்டப்படி, சிறைக் கைதிகளுக்கான ஊதியத்தை சரிவர வழங்கவேண்டும்.
- வெளிநாடுகளை சேர்ந்த சிறைக் கைதிகளை, அவர்களின் உறவினர்கள் பார்வையிட வசதியாக, உரிய விதிகளை வகுக்க, மாநில உள்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் உள்ளது போல, சிறைக்கைதிகளுக்கு ‘தாம்பத்ய உரிமை’ வழங்கும் திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இந்த தீர்மான நகலை, அரசுக்கு அனுப்பி வைக்கும்படி, உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.