டெல்லி: நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பட்டியலில், தமிழ்நாட்டின் திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்கள் ஏழை மாவட்டங்களில் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

நிதிஆயோக் ஆண்டுதோறும் நாட்டின் வறுமை குறியீடு தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதுபோல, இந்த ஆண்டுக்கான தேசிய பல பரிமாண வறுமை குறியீடு பட்டியலை வெளியிட்டு உள்ளது. கடந்த 17ந்தேதி (2023, ஜூலை 17) வெளியான உள்கட்டமைப்பு, வாழ்வாதார மேம்பாடு, கல்வி, சுகாதாரம் . வறுமைக்கோடு தொடர்பான அந்த பட்டியலில், நாட்டில் உள்ள ஏழை மாவட்டங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், தமிழ்நாட்டில் ஏழைகள் அதிகமுள்ள மாவட்ட பட்டியலில், தமிழகத்தின் திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்கள் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிஆயோக் வெளியிட்ட பட்டியலில்,   நாட்டில் வறுமை சதவீதம், 2015-2016ம் ஆண்டில் 24.85 சதவீதத்தில் இருந்து, 2019-2021ல் 14.96 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 நாட்டிலேயே வறுமை குறைந்த மாநிலமாக கேரளா இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நாட்டிலுள்ள 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சிலவற்றில் உள்ள, 24 மாவட்டங்களில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அப்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வட மாநிலங்களில், தலைநகர் டில்லியில் உள்ள மத்திய, வடக்கு, மேற்கு, தென்மேற்கு டில்லி, புதுடில்லி மாவட்டங்கள், பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டா, பரிட்கோட், ஜலந்தர், லுாதியானா, ரூப்நகர் ஆகிய மாவட்டங்களிலும், ஹரியானாவில், அம்பாலா, யமுனா நகர் மாவட்டங்களில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிம் மாநிலத்தின் மங்கன், நாம்ச்சி மாவட்டங்களில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தென் இந்தியாவில் கேரள மாநிலத்தின் காசர்கோடு, கோட்டயம், கோழிக்கோடு, பாலக்காடு, தமிழகத்தின் சென்னை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது தவிர, அருணாச்சலபிரதேசம், மேகாலயா, ஹிமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில், தலா ஒரு மாவட்டங்களில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இப்பட்டியலில், மேகாலயா மாநிலத்தில் உள்ள தென்மேற்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில், 12.9 சதவீதம் அளவுக்கு ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு, ஏழ்மை சதவீதம், 39.6 ல் இருந்து, 52.5 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை மாவட்டத்தில், தேசிய குடும்ப நல அறிக்கையின்படி, ஏழைகளின் எண்ணிக்கை 2015-2016ம் ஆண்டில், 0.93 சதவீதமாக இருந்து, 2019-2021ம் ஆண்டில், 1.03 சதவீதமாக உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில், 2015-2016ம் ஆண்டில், 4.16 சதவீதமாக இருந்து, 2019-2021ம் ஆண்டில், 4.52 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும், புதுக்கோட்டை மாவட்டமே, 4.63 சதவீத ஏழைகளுடன், முதலிடத்தில் உள்ளது.

அதேபோல், குறைவான ஏழைகள் உள்ள மாவட்டங்களில் கன்னியாகுமரியும், கோவை மாவட்டங்கள், முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.

முழு விவரங்களை காண கீழே உள்ள பிடிஎஃப் பைலை தரவிறக்கம் செய்யவும்…

National-Multidimentional-Poverty-Index-2023-Final-17th-July