சென்னை: சட்டவிரோதமாக மாணவர்கள் சேர்க்கை நடத்திய 8புதுச்சேரி மருத்துவக்கல்லூரிகளுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை  உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவையும் உறுதி செய்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் விதிகளை மீறி மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கடந்த 2017ம் ஆண்டு புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து, கவர்னர் கிரண்பேடி அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், சிபிஐக்கும் கடிதம் எழுதி இருந்தார். அதையடுத்து,  2017ம் ஆண்டு  செப்டம்பர் மாதம், 2016-17ம் ஆண்டு  மருத்துவ மாணவர்கள்சேர்க்கை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில்,  விதிகள் மீறி  770 மாணவர்கள் சேர்க்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவர்களை உடனே டிஸ்மிஸ் செய்து, கல்லூரியில் இருந்து வெளியேற்ற இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து மாணவர்கள் தரப்பில் வழக்குகள் தொடர்பான வழக்குகளும் தொடரப்பட்டன. இதற்கிடையில், புதுச்சேரி அரசு,  மருத்துவ கல்லூரிகளில்   மாணவர் சேர்க்கை தொடர்பான அறிக்கையை மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பியது. அதை ஆய்வு செய்த இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக 3 மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டதை உறுதி செய்தது.  அதையடுத்து, விதிகளை மீறி சேர்க்கப்பட்ட 105 எம்.பி.பி.எஸ். மாணவர்களை நீக்க உடடினயாக உத்தரவிட்டது.

அதன்படி, மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரியில்-41 மாணவர்களும், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில்-38 மாணவர்களும், பிம்ஸ் மருத்துவ கல்லூரியில்-26 மாணவர்கள்  என மொத்தம் 105 மாணவர்கள் தங்களின் படிப்பை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, முறைகேடாக விதிகளை மீறி மாணவர்களை சேர்ந்த 8 தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்ததுடன், எம்சிஐ-ன் உத்தரவு சரிதான் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ்  தீர்ப்பு வழங்கியுள்ளார்.