பெங்களூர்,

ருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூர் பரபரப்பன அகரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, சிறை அதிகாரிகளுக்கு கோடிகணக்கான ரூபாய் லஞ்சமாக கொடுத்து, சிறையில் சொகுசாக வாழ்ந்து வந்த தகவல்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சிறையில் உள்ள சசிகரா தமிழகத்தில் இருந்து ஏராளமான அரசியல் விஐபிக்கள் வந்து பார்த்து விட்டுச் செல்வதாகவும், இதன் காரணமாக சிறையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இந்நிலையில், சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததற்கு ஆதாராக ஏராளமான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து சிறையை ஆய்வு செய்து பரபரப்பை ஏற்படுத்திய டிஐஜி ரூபா கூறியிருப்பதாவது,

சிறையில் நடைபெற்ற ஊழலை குறித்து உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியதில் உள் நோக்கம் ஏதுமில்லை என்றும்,  என்னை பாஜ தலைவர்கள் யாரும் இயக்கவில்லை என்றார்.

நான் நேர்மையாக பணியாற்றி வருவதால் அடிக்கடி பணி மாற்றத்துக்கு ஆளாகி வருகிறேன் என்றும், சிறையில் நான்  என்னுடைய வேலையை பார்த்ததால்தான் இவ்வளவு பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன என்றார்.

மேலும்,  கடந்த முறை பாரதியஜனதா தலைமையிலான ஆட்சியின்போது, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு கொடுக்கப்பட்டிருந்த  அதிகமான பாதுகாப்பை குறைத்தேன். அப்போது, பாரதிய ஜனதா கட்சியினர் விமர்சனக்கு ஆளானேன். என்னைப் பொறுத்தவரை கட்சி பாகுபாடு கிடையாது என்றார்.

ஒரு அரசு ஊழியராக நான் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்வேன். நான் நேர்மையாக இருப்ப தால்தான் என் மீது வேறு குற்றச்சாட்டுகளை சுமத்த முடியவில்லை. எனவே, சசிகலா விவகாரத்தில் என்மீது குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

சிறை விவகாரம் குறித்து, கர்நாடக  அரசு அமைத்துள்ள விசாரணைக் கமிஷன் நூறு சதவீதம் நேர்மையாக நடைபெறும் என்று நம்புவதாகவும், இந்த விசாரணையை நாடு முழுவதும் எதிர்பார்க்கிறது என்றும்,   இதை மக்களும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர் என்றார்.

விசாரணை முடிவில் யார் தவறு செய்தார்கள் என்பது தெரியவரும், அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்

இவ்வாறு ரூபா கூறினார்.

சசிகலா விவகாரம் குறித்து சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெ.-சசிக்கு எதிராக வாதாடிய பிரபல வழக்கறிஞர் ஆச்சார்யாவும் ஆலோனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட வசதிகள் குறித்து மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாடலாமா என்று தனது உதவியாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக பெங்களூர் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

தற்போது  4 ஆண்டுகள் சிறைத் தண்டனை காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மீதான, விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு மேலும் பல ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இதன் காரணமாக சசிகலாவின் சிறை தண்டனை மேலும் சில ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம் என்றும், சசிகலாவை டில்லி திகார் சிறைக்கு மாற்றுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.