எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக இலங்கை நாடாளுமன்றத்தில் டக்ளத் தேவானந்தா குற்றச்சாட்டு!

Must read

கொழும்பு: எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு கூறிய இலங்கை தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம்  நடைபெற்று வருகிறது. இதில் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழர்கள் வாழ்ந்த/ வாழும் பிரதேசங்களில்  யுத்த காலத்தில் இறந்த மாவீரர்களை மக்கள் நினைவுக் கூர்ந்து விடுவார்கள் என்பதற்காக ஒவ்வொரு துயிலும் இல்லங்களுக்கு முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும மறைந்த பிரபாகரன் தலைமையிலான  விடுதலைப் புலிகள் ஆட்சியின் போது,  யாரும் போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருக்க வில்லை .2009ம் ஆண்டுக்கு பின்னரே வடக்குப் பகுதியில் போதைப் பொருட்கள் அறிமுகமானது.  வடக்கு, கிழக்கு மாகாணங்களில்  யாரும் போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருக்க வில்லை என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார் என குற்றஞ்சாட்டினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த  சிவஞானம் சிறீதரன், அவ்வாறு ஒருபோதும் நடைபெறவில்லை என்று மறுப்பு தெரிவித்ததுடன்,  நான் அரசுக்கு வக்காளத்து வாங்கும் கையாளும் அல்ல,  பதவிக்காக ஆளும் தரப்பின் கால்களைக் கழுவி பிழைக்கவும் வரவில்லை. தமிழர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  நியாயமாக தீர்வை முன்வையுங்கள் என்று தெரிவித்தார்.

More articles

Latest article