அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்கப்புக் கலையான ‘டேக்வாண்டோ’வின் உயரிய பட்டமான 9வது டான் பட்டத்தைப் பெற்றிருக்கிறார்.

வட கொரிய அதிபர் கிம் ஜான் உங் மற்றும் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் உள்ளிட்ட முக்கிய நபர்களுடன் தனது பதவி காலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது அலுவலகத்தில் மாட்டியிருக்கும் டிரம்ப் இப்போது தென்கொரிய தற்காப்புக் கலை அமைப்பு வழங்கியுள்ள இந்த பட்டத்தையும் தொங்கவிடயிருக்கிறார்.

9வது நிலை டான் என்ற கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை டொனால்டு டிரம்பிற்கு வழங்கிய சர்வதேச டேக்வாண்டோ சங்கத்தின் தலைவர் லீ டாங் சுப் “டேக்வாண்டோ பயிற்சியில் இதுவரை ஈடுபடாத டிரம்பிற்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த பட்டம் கௌரவ பட்டம்” என்பதை தெளிவு படுத்தினார்.

2013ம் ஆண்டு ரஷ்ய அதிபர் புடினுக்கும் இதேபோல் கௌரவ பட்டம் வழங்கப்பட்டது அப்போது அவரும் டேக்வாண்டோ தற்காப்புக் கலையை கற்றிருக்கவில்லை என்பதும் அதன்பிறகு தான் அதை கற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கௌரவ பட்டம் பெற்றதன் மூலம் எட்டாவது நிலை டான் பட்டம் வென்றுள்ள அமெரிக்காவின் தற்காப்புக் கலைவீரரான சக் நோரிஸை விட இவ்விருவரும் ஒரு நிலை கூடுதலாகப் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த டிரம்ப் “தென் கொரியாவின் குக்கிவான் குழு நடத்தும் டேக்வாண்டோ காட்சி விளக்கப் போட்டியைக் காண ஆவலுடன் இருப்பதாக” தெரிவித்துள்ளார்.