பெங்களூரு

நேற்று கர்னாடக அரசு தாக்கல் செய்த இடைக்கால நிதி நிலை அறிக்கையில் இலவச எரிவாயு இணைப்பு உட்பட பல நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நேற்று கர்னாடகா சட்டசபையில் 2018-19க்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார்.    இது தற்போதைய காங்கிரஸ் அரசின் கடைசி நிதிநிலை அறிக்கை ஆகும்.   வரும் தேர்தலில் கர்னாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால் இந்த திட்டங்கள் அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையில் வரி உயர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லை.    மதுபானங்களுக்கு மட்டும் 8% கூடுதல் வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் இரு பர்னர்கள் கொண்ட அடுப்பு ஒன்றும் இரு சிலிண்டர்களும் சுமார் 30 லட்சம் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

பிற்படுத்தப்பட்ட சமுதாய இடஒதுக்கீட்டுக்கான வருமான உச்ச வரம்பு ரூ. 8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.    விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேரும் ரூ. 5000 வீதம் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.  இந்த தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்படும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தற்போது சலுகைக் கட்டணத்தில் வழங்கப்பட்டு வரும் பாஸ் இனி இலவசமாக வழங்கப்படும்.   இதனால் 19.6 லட்சம் மாணவ மாணவிகள் பயன் பெறுவார்கள்.

பெங்களூரு மெட்ரோ ரெயில் விரிவாக்கம் இன்னும் 266 கிமீ தூரத்துக்கு அதிகரிக்கப்பட உள்ளது.

குடும்ப நலம், மற்றும் சுகாதாரத் துறையின் கீழ் புதியதாக 9000 சுகாதார நிலையங்கள் அமைக்கப் பட உள்ளன.

இந்திரா உணவகம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்

இது போல பல நலத்திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.