ஐதராபாத்:

க்களை ஏமாற்ற நினைத்தால் தோற்கப்படுப்படுவீர்கள் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடிக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.

சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய நிதிநிலை அறிக்கையில், பாஜகவின் கூட்டணி கட்சி ஆட்சி செய்து வரும் ஆந்திராவுக்கு சிறப்பு நிதியோ, திட்டங்களோ இல்லை என்று கூறி, ஆந்திர மாநில எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். பாராளுமன்ற வளாகத்திலும் போராட்டம் நடத்தினர்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பாஜ – தெலுங்குதேசம் இடையே உள்ள கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கியது.

ஏற்கனவே,  ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம்  தனியாக பிரிக்கப்பட்ட பின், நடைபெற்ற  நாடாளு மன்றத் தேர்தலில் பாஜக – தெலுங்கு தேச கூட்டணி,  ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் அளிக்கப்படும் என்று கூறி வெற்றி பெற்றது.

ஆனால், உறுதி அளித்தபடி பாஜக அரசு நடந்துகொள்ளவில்லை என்று சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி வந்தார்.  இந்நிலையில், பட்ஜெட்டிலும் எந்தவித சலுகையும் அறிவிக்காததால், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள்  அமளியில் ஈடுபட்டனர். ஆனால், சந்திரபாபு நாயுடு இதுவரை வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில், 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்  ஆலோசனைக் கூட்டம் அமராவதி நகரில் நடைபெற்றது. இதில் பேசிய சந்திரபாபு நாயுடு, மத்திய  பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது, அரசியல்வாதிகள் தங்களை ஏமாற்றுகிறார்கள் என மக்கள் நினைத்தால், அவர்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்றார்.

மேலும்,  மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால்,  மக்கள் ஏமாற்றப்படுகிறோம் என உணர்ந்துவிட்டால்,  நாம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிடுவோம். இதன் காரணமாக அவர்கள் தேர்தலின்போது கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும் என்று எச்சரித்தார்.

ஏற்கனவே ஆந்திர மாநிலத்தை பிரிக்கக் கூடாது என்று நாங்கள் கூறியபோது, அதை மீறி காங்கிரஸ் அரசு பிரித்ததால், அவர்களால் மாநிலத்தில் டெபாசிட் கூட வாங்க முடியாத நிலையை மைக்கள் உருவாக்கினார்கள் என்பதை நினைவு கூறுவதாகவும் குறிப்பிட்டார்.

சந்திரபாபு நாயுடுவின் இந்த மறைமுக எச்சரிக்கை பேச்சு மாநில பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.