வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றில் இருந்து பாதுகாக்கக்கூடிய ஆடைகள் என்று விளம்பரப்படுத்தப் பட்ட ஆடைகளை விற்ற ஆஸ்திரேலிய நிறுவனத்திற்கு 5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ‘லோர்னா ஜேன்’ பிராண்ட் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ‘வைரஸ் ஷீல்டு’ என்ற பெயரில் புதிய ரக ஆடைகளை அறிமுகப்படுத்தியது, இந்த ஆடைகள் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றில் இருந்து பாதுகாக்கக்கூடியது என்று விளம்பரப்படுத்தியது.

கொரோனா பரவல் காரணமாக இதனை ஆர்வமுடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது, இதுகுறித்து லோர்னா ஜேன் நிறுவனம் மீது ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஆஸ்திரேலியன் காம்பெடிஷன் அண்ட் கன்சியூமர் கமிஷன் என்ற வாடிக்கையாளர் பாதுகாப்பு அமைப்பு வழக்குத் தொடுத்தது.

இந்த ஆடையை தயாரித்த ஒரு நம்பிக்கையுள்ள விநியோக நிறுவனம் அளித்த உறுதியை நம்பி வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் என்று கருதி இவ்வாறு விளம்பரப்படுத்தியதாக ஒப்புக்கொண்ட எல்.ஜெ. நிறுவனம், நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தனர்.

தவறான விளம்பரத்தின் மூலம் வாடியாளார்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக செயல்பட்ட குற்றத்திற்காக இந்திய மதிப்பில் ரூ. 27 கோடி அபராதம் விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.