சென்னை; பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, கேஸ் விலை உயர்வு, அத்தியாவசிய பொருள் விலை உயர்வு, அக்னிபாத் திட்டம் மற்றும் பணவீக்கம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் கொடுத்து உள்ளனர். ஆனால், அதை அவைத்தலைவர்கள் ஏற்க மறுத்துவருகின்றனர்.

இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து விட்டு அவைக்குள் செல்கின்றனர். அவையில், தங்களது கோரிக்கைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரு அவைகளும் இன்று 3வது நாக மதியம் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோஷங்களுக்கு மத்தியில் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா,  கோஷமிடுவதில் ஈடுபடும் உறுப்பினர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன், அவர்கள் விவாதங்களில் பங்கேற்க வேண்டும். நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர் என வேண்டுகோள் விடுத்தார். ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையை மதியம் 2மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். அதுபோல ராஜய்சபாவிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டு, அமளியில் ஈடுபட்டதால், அவைத்தலைவர் வெங்கையாநாயுடு, மாநிலங்களவையை மதியம் 2மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.