மக்களவை தேர்தல் : தமிழக நகரங்களில் பொதுக்கூட்டம் நடத்த தடை

Must read

சென்னை

மிழகத்தில் உள்ள நகரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள், சாலைகள், தெரு முனைகள் உள்ளிட்ட பல இடங்களில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 18 ஆம் தேதி அன்று தமிழக்த்தின் அனைத்து மக்களவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அதே தினத்தன்று 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் பல பொதுக்கூட்டங்களிலும் பேரணிகளிலும் கலந்துக் கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

நேற்று காவல்துறை ஆணையர்கள் உள்ளிட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அந்த சுற்றறிக்கை விவரம் வருமாறு :

* தமிழக உள்துறை செயலாளர், காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 20ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் கடந்த 2012ம் ஆண்டு டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடத்தப்பட்ட கூட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அரசியல் சாசனத்தின் 21வது பிரிவில், பொதுமக்களின் தனிநபர் சுதந்திரம் மற்றும் தனி நபர் உரிமை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

* குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், ரோடுகள், ரோடு சந்திப்புகள் ஆகியவற்றில் பொதுக் கூட்டமோ பேரணியோ நடத்தினால் பொது மக்கள் மற்றும் குழந்தைகளின் நடமாட்டம் முடக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

* பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் நகர்புறங்களுக்கு வெளியே அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், பேரணி நடத்த காவல்துறை உயர் அதிகாரிகள் அனுமதி வழங்கலாம்.

* மக்களின் அமைதியான வாழ்க்கை பாதிக்கப்படும் வகையில், எந்த அரசியல் கட்சிகளும், தெரு முனைகள், ரோடுகள், தெருக்களில் பொதுக் கூட்டம் மற்றும் பேரணிகள் நடத்த அனுமதிக்க வேண்டாம்.

* சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி மேற்கண்ட விதிமுறைகளை காவல்துறை ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள்பின்பற்ற வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

மேற்கண்டபடி அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More articles

Latest article