அமித்‌ஷாவிடம் அடகு வைத்த கட்சியை மீட்க முடியாது: தர்மபுரியில் பாமக, அ.தி.மு.கவை அலறவிட்ட மு.க.ஸ்டாலின்

Must read

தர்மபுரி:

கோடநாடு  கொலை குற்றச்சாட்டில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள அ.தி.மு.க.வை பாரதிய ஜனதா கட்சியிடம்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டார் என்று அரூர் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

அமித்‌ஷாவிடம் அடகு வைத்த கட்சியை மீட்க முடியாது என்றவர், அன்புமணி வேட்புமனுவை வாபஸ் வாங்கவும் நேரம் உள்ளதாக  தர்மபுரியில் பாமக, அ.தி.மு.கவை கடுமையாக தாக்கி பேசினார்.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி தர்மபுரி தொகுதியில் பிரசாரம் செய்துவிட்டு சென்ற நிலையில், அடுத்த நாள் அங்கு பிரசாரத்துக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடப்பாடியையும், அன்புமணியையும் கடுமையாக சாடினார்.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி, அரூர் (தனி) சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கிரு‌‌ஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தர்மபுரி மாவட்டம் அரூர் கச்சேரி மேட்டில் நடைபெற்றது.

அப்போது, இதே சேலத்தில், திறந்தவெளி வேனில் காலியாக உள்ள சாலைகளில் முதல்-அமைச்சர் பிரசாரம் செய்து வந்த போட்டோ வெளியாகி உள்ளது…. சேலத்தில் தேர்தல் பிரசாரத் தில் ஈடுபட்ட முதல்வர், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தன்னை நம்பி அ.தி.மு.க.வை விட்டு சென்று உள்ளதாக பேசி உள்ளார். ஆனால் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும்  மறந்த எடப்பாடி பழனிசாமி மோடியையும், அமித்‌ஷாவையும் தெய்வமாக வணங்கி கொண்டிருக்கிறார் என்று கூறியவர், அ.தி.மு.க.வை அமித்‌ஷாவிடம் அடகு வைத்துவிட்டார். மார்வாடி கடையில் நகையை அடகு வைத்தால் மீட்டுவிடலாம். ஆனால் அமித்‌ஷாவிடம் அடகு வைத்த கட்சியை மீட்க முடியாது. தன் மீது சுமத்தப்பட்ட கொலை குற்றச்சாட்டில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவே எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.கவை அமித்‌ஷாவிடம் அடகு வைத்து உள்ளார்.

இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு மெகா கூட்டணி அமைத்து இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். மெகாகூட்டணி என்ற பெயரில் மோசமானவர்கள் எல்லாம் சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.  பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க. அரசு முகம் சுளிக்காத அளவிற்கு ஆட்சி நடத்துவதாக கூறினார். அவருடைய இந்த பேச்சை கேட்டு தமிழக மக்கள்தான் முகம் சுளிக்கிறார்கள். மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று கூறி 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வழக்கு போட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ், முதல்-அமைச்சரிடம் கொடுத்துள்ள 10 அம்ச கோரிக்கைகளில் 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தவில்லை.

இந்த கூட்டணி மூலம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது கம்பீரம் மற்றும் கவர்ச்சியை இழந்து விட்டார். அவர் மனப்பூர்வமாக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இன்னும் வேட்புமனுவை வாபஸ் பெற காலஅவகாசம் இருக்கிறது. எனவே அன்புமணிராமதாஸ் தனது வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

More articles

Latest article