சென்னை:  6-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது, இதையடுத்து, தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.

வரும் 25ந்தேதி (மே 25)   ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது  8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடை பெறுகிறது. இதில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

18வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி தொடங்கிய நிலையில், 7கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1ந்தேதி நடைபெற உள்ளது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெறும் என்றும்  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

அதன்படி 6வது கட்ட தேர்தல், 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள  58 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இந்த 58 தொகுதிகளில் 889 வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர்.  நாளை மறுதினம் (மே 25ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. அதைத்தொடர்ந்த நாளை காலை முதல் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும்பணி தொடங்கும். தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த  6-ம் கட்ட தேர்தலானது,  உத்தரப் பிரதேசத்தில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கும், அரியானாவில் 10 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், டெல்லியில் 7 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

 வாக்குப்பதிவு நடைபெற உள்ள 6வது மற்றும் 7 வது கட்ட தேர்தலில்,  உ.பி.யில் மீதமுள்ள 27 தொகுதிகளுக்கு இந்த இரண்டு கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி  உள்பட பல முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  வரவிருக்கும் இரண்டு கட்டங்களில், NDA மற்றும் இந்திய கூட்டணியின் பல முக்கியஸ்தர்கள் களத்தில் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி முதல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய் ராய் வரை இந்தக் கட்டங்களில் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.  6வது கட்ட  தேர்தலையொட்டி, இன்று நடைபெறும்  கடைசி நாள் பிரசாரத்தில் பல மதிப்புமிக்க தலைவர்கள்  டெல்லியில் பேரணி நடத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர்  ஸ்மிருதி இரானி சாந்தினி சவுக்கிலும், ராகுல் காந்தி தில்ஷாத் கார்டனிலும் ரோட் ஷோ நடத்துகிறார்கள்.