விழுப்புரம்:  தமிழ்நாட்டில்  கடந்த 3 ஆண்டுகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எவ்வித சாதனையையும் செய்யவில்லை என்றும்,திமுகவின் தேர்தல் அறிக்கையில் 10% கூட நிறை வேற்றவில்லை. இது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்து உள்ளார்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஏராளமான சாதனைகளை செய்துள்ளதாக பட்டியிலிட்டு வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக அரசு எந்தவொரு சாதனையையும் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்,.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ்  இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  “முதல்வர் ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் எவ்வித சாதனையும் செய்யவில்லை. மீதமுள்ள ஆண்டுகளில் சாதனை படைத்து முத்திரை பதிக்கவேண்டும்.” என்று  வலியுறுத்தினார்,.

தொடர்ந்து பேசியவர், திமுக அரசு,  “தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தக்கூடாது என்றவர்,  ஒருவர் பெயரில் தனித்தனி மின் இணைப்புகள் இருந்தால் அதனை ஒன்றாக்கும் முயற்சியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. இந்நடவடிக்கை கண்டிக்கதக்கது. இது அனைத்து மக்களையும் கடுமையாக பாதிக்கும்.

ஏற்கனவே தமிழ்நாடு அரசு, மின் இணைப்புடன் ஆதார் கார்டை இணைக்கும்போதே இந்த அச்சம் ஏற்பட்டது.  அதனால், திமுக அரசு, பல மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.  அதுபோல, ஆண்டுதோறும் ஜூலையில் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும்.

கடந்த ஆண்டு அரசின் மின் கட்டண உயர்வுக்கு  பாமக கடுமையாக எதிர்த்ததால், திமுக அரசு  வீடுகளை தவிர்த்துவிட்டு,  வணிக நிறுவனங்களுக்கு மட்டும் கட்டணம் உயர்த்தப்பட்டதாக சுட்டிக்காட்டியவர்,  இதுவரை  ரூ.31,500 கோடி அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், இன்னும் தமிழ்நாடு  மின்வாரிய நஷ்டம் குறையவில்லை. நஷ்டத்தை தடுக்க,  மின்வாரியத்தில் நடக்கும் ஊழல்களைத்தான் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

திமுக தேர்தல் அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்திய ராமதாஸ், தேர்தல் அறிக்கையில் 10% கூட நிறைவேற்றவில்லை. இது மக்களை ஏமாற்றும் செயல் என சொல்லலாம். 510 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவிக்கவேண்டும்.

பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தின் மூலம் மக்களுக்கு தேவையான அடிப்படை சான்றுகளை பெற ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை கையூட்டு கொடுக்கவேண்டியுள்ளது. கையூட்டு கொடுத்தால் சேவை கிடைப்பது அவமானமாகும். பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால் சேவைக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். இச்சட்டம் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் இச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

தமிழக முதல்வர்கள் ஒவ்வொருவரும் சாதனை படைத்து வரலாற்றில் இடம் பிடித்தனர். ராஜாஜி சென்னை மாகாணத்தில் மதுவிலக்கை அறிமுகம் செய்தார். அதனை ஓமந்தூரார் சென்னை மாகாணம் முழுவதும் விரிவுபடுத்தினார். காமராஜர் பாசன திட்டங்களையும், அண்ணா மும்மொழி திட்டத்தை ரத்து செய்து, சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றினார். கலைஞர் 3 வகையான இட ஒதுக்கீட்டையும், எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தையும், ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டத்தையும், 69 சதவீத இட ஒதுக்கீட்டை 9வது அட்டவணையில் கொண்டுவந்தார்.

முதல்வர் ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் எவ்வித சாதனையும் செய்யவில்லை. காலை உணவு திட்டத்தை தவிர வேறு எந்த சாதனையையும் முதல்வர் செய்யவில்லை” என்று கூறியவர், மீதமுள்ள ஆண்டுகளில் சாதனை படைத்து முத்திரை பதிக்கவேண்டும்.

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஒடுக்கப்படுவார்கள் என்று முதல்வர் கூறினாலும் நடைமுறைபடுத்தவில்லை. தமிழ்நாடு குறித்த பெருங்கனவு எங்களுக்கு உள்ளது.தமிழகத்தில் கொலை, கொள்ளைகள் அதிகம் நடைபெறுவதை தடுக்க காவல்துறை விழிப்புடன் இருக்க வேண்டும்.  எங்களுக்கு 6 மாதங்கள் ஆட்சியை கொடுத்தால் நாங்கள் நிறைவேற்றுவோம் அல்லது நேர்மையான 10 அதிகாரிகளை ஒப்படைத்தால்கூட இதனை சாத்தியமாக்கி காட்டுவோம். இதற்கான திட்டங்களை காவல்துறை அதிகாரிகள் கேட்டால் நாங்கள் சொல்ல தயாராக உள்ளோம்.

தமிழ்நாட்டில்,  பாசனத் திட்டங்களை திமுக, அதிமுக  என இரு அரசுகளும் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டியவர்,  தமிழ்நாட்டில்,  காமராஜர் காலத்தில்தான்  அணைகள் கட்டப்பட்டன. கடந்த 57 ஆண்டுகளில் இக்கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாட்டில்  அணைகள் கட்டப்படவில்லை.  ஆனால், திமுக ஆட்சியில் 41 அணைகள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இவற்றை அணைகள் என சொல்ல முடியாது. இந்த அணைகளில் ஒரு டிஎம்சி கொள்ளளவுகூட தண்ணீர் இல்லை.

நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ 700 ஊக்கத்தொகை கொடுக்க வேண்டும்  என வலியுறுத்தியவர்,  தெலங்கானாவில் சன்ன ரக நெல்லுக்கு ரூ.500 வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிலும் அதுபோல நெல் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும்,   தமிழகத்தில் நடப்பாண்டில் 10 லட்சம் டன் நெல் கொள்முதல் குறைந்துள்ளது. 24-25 ஆண்டில் 40 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டால் ரூ.2500 கோடி செலவாகும். இது சாத்தியமானதுதான் என்றார்.

கேரள மாநில அரசு முல்லை பெரியாறு புதிய அணைக்கு பதில் புதிய அணைகட்ட முயற்சித்து வருகிறது. அதற்கு தமிழ்நாடு  அனுமதி தரக்கூடாது என்றவர், இதுதொடர்பாக வரும் 28ம் தேதி சுற்றுச்சூழல் குழு விவாதிக்க உள்ளது, இது கண்டிக்கதக்கது. உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் கேரள அரசின் அணைகட்டும் முயற்சியை கைவிட மத்திய அரசு ஆணை பிறப்பிக்கவேண்டும் என்றார். முல்லை பெரியாறு அணை குறித்து தேர்தல் முடிவுக்கு பின் பிரதமரை சந்தித்து வலியுறுத்துவேன் என்றார்.

விழுப்புரம் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மிதக்க காரணம் அது பூந்தோட்டம் ஏரியில் கட்டப்பட்டது. இது போலவே திண்டிவனம் பேருந்து நிலையம் ஏரியில் கட்டப்படுவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.