டில்லி

கேரள மாநிலத்தில் மக்களவை தேர்தலில் பாஜகவின் 14 வேட்பாளர்களில் 13 வேட்பாளர்கள் பெயர்கள் வெளியாகி உள்ளன.

கேரள மாநிலத்தில் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன.  இதில் 14 தொகுதிகளில் பாஜக போட்டி இடுகிறது.   மீதமுள்ள தொகுதிகளில் 5 தொகுதிகளில் பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியான பாரத் தர்ம ஜன சேனை போட்டியிடுகிறது.   ஒரு தொகுதியில் மத்திய அமைச்சர் பி சி தாமஸின் கேரளா காங்கிரஸ் போட்டி இடுகிறது.

நேற்று பாஜக வேட்பாளர் பட்டியலை கட்சியின் மூத்த தலைவர் நத்தா வெளியிட்டார்.   அதில் 13 பாஜக வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.   இன்னும் சபரிமலை அமைந்துள்ள பட்டினம் திட்டா தொகுதிக்கான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.

முன்னாள் ஸ்ரீசங்கராசாரியா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும் கேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவருமான ராதாகிருஷ்ணன் கடந்த ஞாயிறு அன்று பாஜகவில் இணைந்தார்.   இவர் முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு மிகவும் நெருக்கமானவர்.   இவருக்கு ஆலப்புழா மக்களவை தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் அல்போன்ஸ் எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிட உள்ளார்.  இந்த தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஹிபி ஏடன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் பீ ராஜிவ் ஆகியோர் போட்டி இடுகின்றனர்.

மிசோரம் மாநில ஆளுநர் பதவியை இந்த மாத தொடக்கத்தில் ராஜினாமா செய்த கும்மாணம் ராஜசேகரன் திருவனந்த புரத்தில் காங்கிரஸ் தலைவரும் தற்போதைய மக்களவை உறுப்பினருமான சசி தரூரை எதிர்த்து களத்தில் இறங்குகிறார்.   இந்த போட்டியில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரான மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த திவாகரனும் உள்ளார்.

சென்ற முறை பாலக்காடு தொகுதியில் போட்டியிட்ட ஷோபா சுரேந்திரன் தற்போது அத்திங்கல் தொகுதியில் போட்டி இடுகிறார்.   இதைத் தவிர ஏ என் ராதாகிருஷ்ணன் சாலக்குடி தொகுதியிலும், பத்மனாபன் கண்ணூர் தொகுதியிலும் ரவேஷ் தாந்திரி குமார் காசரகோட் தொகுதியிலும் போட்டி இடுகின்றனர்.

அவர்களுடன் வடக்கரை தொகுதியில் உன்னிகிருஷ்ணன் மாஸ்டர், பொன்மணி தொகுதியில் வி டி ரேமா, பாலக்காடு தொகுதியில் சி கிருஷ்ணகுமார், மற்றும் கொல்லம் தொகுதியில் கே வி சாபு ஆகியோரும் தேர்தல் களத்தில் உள்ளனர்.