காசியாபாத்: தேர்தலில், வேட்பாளர்களின் செலவை கட்டுப்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறும் வேட்பாளர்களுக்கு கிடுக்கிப்பிடி போட, உத்திரப்பிரதேச காசியாபாத் மாவட்ட நிர்வாகம் அசத்தலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தேர்தல் பிரச்சார செலவினங்களில் இடம்பெறும் உணவுகள், தின்பண்டங்கள், பூஜை செலவுகள், வாகன செலவுகள் உள்ளிட்ட அனைத்தையும் கள ஆய்வு செய்து, உண்மையான விலையை பட்டியலிட்டுள்ளது.

இதன்மூலம், வேட்பாளர்கள் மிகையான கணக்கு காட்டுவது அவ்வளவு சுலபமல்ல என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச செலவுத் தொகையான ரூ.70 லட்சம் என்ற அளவை, வேட்பாளர்கள் மீறாத வகையிலும், அப்படி மீறினால் அதைக் கண்டறியும் வகையிலும், மார்க்கெட் சர்வே நடத்தியுள்ளனர் அம்மாவட்ட அதிகாரிகள்.

உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டால், சமோசா, பிரட் பக்கோரா, பலுஷாய், கஜு பர்ஃபி, ஆப்பிள், கொய்யா மற்றும் வாழைப்பழம் போன்ற பலவற்றின் விலைகளையும், வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்களில் நடத்தப்படும் பூஜை மற்றும் பூஜைப் பொருட்களுக்கான செலவின‍ங்களையும், எஸ்.யு.வி, மாருதி, மெர்சிடஸ், பஜேரோ, ஃபார்சூனர் மற்றும் சொகுசுப் பேருந்துகள் போன்ற வாகனங்களுக்கான செலவினங்களையும் மார்க்கெட் சர்வே செய்து, விரிவான முறையில் குறித்து வைத்து காத்துக்கொண்டுள்ளது காசியாபாத் மாவட்ட நிர்வாகம்.

ஆனால், இதற்கெல்லாம் சளைத்தவர்களா நமது வேட்பாளர்கள்..!

– மதுரை மாயாண்டி