கேரள மாநிலத்தில் அதிக அளவில் அல்ட்ரா வயலட் (UV) கதிர்வீச்சு பதிவாகியதால் பல மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA), வெளியிட்ட தகவலின்படி, பத்தனம்திட்டா (கொன்னி), ஆலப்புழா (செங்கனூர்), கோட்டயம் (சங்கனசேரி), இடுக்கி (மூணார்) ஆகிய இடங்களில் UV அளவு 8-ஐ கடந்துள்ளது.

மேலும், மாநிலத்தின் பல பகுதிகளில் 6 முதல் 7 வரை UV அளவு பதிவாகி மஞ்சள் எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை UV கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் என்பதால், இந்த நேரத்தில் நேரடி வெயிலில் செல்லாமல் இருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிக நேரம் UV கதிர்களுக்கு உட்பட்டால் சருமம் கருகுதல், சரும நோய்கள், கண் பிரச்சினைகள் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

வெளியில் வேலை செய்பவர்கள், மீனவர்கள், வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உடல்நல குறைபாடு உள்ளவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்காக தொப்பி, குடை, கண்ணாடி பயன்படுத்தவும், முழு உடலை மூடும் பருத்தி உடைகள் அணியவும், வெளியில் செல்லும்போது இடைவெளி எடுத்து நிழலில் ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

[youtube-feed feed=1]