டெல்லி : ஊரடங்கு உடனடியாக திரும்ப பெறப்படாது என்று எதிர்க்கட்சி தலைவர்களுடனான ஆலோசனையின் போது பிரதமர் மோடி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வந்ததை அடுத்து மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. ஊரடங்கு வரும் 14ம் தேதி வரை அமலில் இருக்கும்.

ஆனால், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதே வேளையில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மேலும் 4 வாரங்களுக்கு மூட மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களுடன் கொரோனா பாதுகாப்பு குறித்து காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, ஊரடங்கு உடனடியாக திரும்ப பெறப்படாது என்று தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஆலோசனையின் போது, ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை தொடரும் அவசியம் பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். பிரதமருடன் பேசிய கட்சித் தலைவர்களில் சிலரும் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை தொடரலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் வரும் 11ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். அந்த ஆலோசனைக்குப் பின் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக வரும் ஞாயிறன்று அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.