சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு நீடித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து கடந்த 14ம் தேதி தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து ஊரடங்கை 21ந்தேதி (நாளை மறுநாள்) காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை மேலும் தளர்வுகளுடன்  நீட்டிப்பது தொடர்பாக  தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின், மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனையில் திங்கட்கிழமை முதல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்குவது, ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அரசு போக்குவரத்துக்கழக நடத்துனர்கள், பேருந்து ஓட்டுனர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 19 ஆயிரம் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துஉள்ளது. இதனால், பொதுமுடக்கத்தால் முடங்கியுள்ள அரசு போக்குவரத்து சேவை 50 சதவீத பயணிகளுடன் மீண்டும் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாவட்டத்திற்குள் பேருந்து போக்குவரத்து அனுமதி என்பது பலவகை நடைமுறை சிரமங்களுடையது என்பதால் முழு அளவில் மாவட்டங்களுக்கு இடையிலும் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படலாம் என்றும், மேலும் பல்வேறு நிறுவனங்கள் திறக்கவும் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.