சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி போடும் பணியை தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை  தொடங்கி உள்ளது.

நாடு முழுவதும் தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். தற்போதைய நிலையில், ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் உற்பத்தியாகும் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதற்கிடையில் ரஷ்யா தயாரிப்பான அடினோ வைரஸ் தொழில்நுட்பத்திலான  ‘‘ஸ்புட்னிக் வி’’ தடுப்பூசியும் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.மேலும் ஸ்புங்டனிக் தடுப்பூசி தயாரிக்க ஐதராபாத் நிறுவனமும் அனுமதி பெற்றுள்ளது. இந்த தடுப்பூசியின் செயல்திறன் 91.6% என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடுப்பூசியானது சென்னை உள்பட 9 நகரங்களில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும்,  ‘‘ஸ்புட்னிக் வி’’ தடுப்பூசியை கொள்முதல் செய்து பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

அதன்படி, டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்திடம் இருந்து ‘‘ஸ்புட்னிக் வி’’ தடுப்பூசியை அப்பல்லோ மருத்துவமனை கொள்முதல் செய்தது. தமிழகத்தில் முதல்முறையாக ‘‘ஸ்புட்னிக் வி’’ தடுப்பூசி போடும் பணி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. ஏற்கனவே பதிவு செய்து காத்திருந்தவர்கள் தடுப்பூசி எடுத்து வருகிறாரகள்.

ஒரு தவணை தடுப்பூசி  விலை ரூ.1,145க்கு என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதல் தவணை தடுப்பூசிக்கும் 2வது தவணை தடுப்பூசிக்கும் இடையேயான கால இடைவெளி 3 வாரங்களாக உள்ளது.