சென்னை,

மிழக உள்ளாட்சி பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவு படி, உள்ளாட்சி களை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

அவர்களின் பதவி காலம் இந்த மாதத்தோடு முடிவடையும் நிலையில், மேலும் 6 மாதத்திற்கு பதவி நீட்டிப்பு கோரும் சட்ட மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அடோபர் மாதம்  24-ந் தேதியுடன் முடிவடைந்தது.  அதையடுத்து  தமிழகத்தில் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஆனால், உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு சரிவர பின்பற்றவில்லை என்று திமுக சார்பில் தொடரப்பட்டு வழக்கு காரணமாக,  உள்ளாட்சிதேர்தல் குறித்து தமிழகஅரசு பிறப்பித்த அரசாணை களை ரத்துசெய்து  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்  உத்தரவிட்டார். மேலும் டிசம்பர் 31ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பானையை வெளியிடவும் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து உள்ளாட்சிகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

ஐகோர்ட்டு தனி நீதிபதி விதித்த தடையை எதிர்த்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டு பெஞ்சில் மேற்முறையீடு செய்தது.

ஆனால், ஐகோர்ட்டும் ஜனவரி 31ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என உத்தர விட்டது.

 

இந்நிலையில், இந்த வழக்கு மூன்று முறை விசாரணைக்கு வந்துள்ளது. ஆனால், அரசு சார்பில் ஒவ்வொரு முறையும் அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து கடந்த 27ந்தேதி விசாரணைக்கு வந்தபோது,   உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய அறிவிப்பாணை வெளியிடுவது தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மாநில தேர்தல் ஆணையம்,  உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த நடவடிக்கை மேற்கோள்ளபட்டுள்ளது அதற்கு அவகாசம் தேவை என கோரியது.

ஆனால், தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை மறுத்த நீதிபதிகள்  வரும் செவ்வாய்கிழமை விளக்கம் அளிக்க வேண்டும் என  உத்தரவிட்டனர்.

அதையடுத்து நாளை விசாரணைக்கு வர இருக்கும் நிலையில்,  உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளை நியமித்ததற்கான உத்தரவுக்காக சட்ட மசோதா இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

இந்த மசோதாவில் உள்ளாட்சியை நிர்வகிக்கும் தனி அதிகாரிகளின் பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்க வகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிபோகும் சூழ்நிலை உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.