தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி

Must read

சென்னை:

மிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று உலக சிங்க தினம் கொண்டாடப்படுவதையொட்டி,  சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில்  அண்மையில் பிறந்த மூன்று சிங்கக் குட்டிகளுக்கும்,  நான்கு புலிக்குட்டிகளுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  பெயர் சூட்டினார்.

இதில், ஆண் சிங்கக்குட்டிக்கு பிரதீப் என்றும், பெண் சிங்கக் குட்டிகளுக்கு தட்சிணா, நிரஞ்சனா எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல, ஆண் புலிக்குட்டிகளுக்கு மித்ரன், ரித்விக் எனவும், பெண் புலிக்குட்டிகளுக்கு யுகா, வெண்மதி எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அப்போது பேசிய முதல்வர்,  30 ஆண்டுகளுக்குப் பிறகு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு, ஐதராபாத் நேரு உயிரியல் பூங்காவிலிருந்து காண்டாமிருகம் வரவழைக்கப்பட்டிருந்தது. அது  இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருப்பதாகவும்,  அந்த காண்டா மிருகத்துக்கு ராமு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இந்த காண்டா மிருகத்துக்கு இணையாக, பெண் காண்டாமிருகத்தை பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவரிடம் சரமாரியாக கேள்விக்கணைத் தொடுத்தனர். அப்போது, வேலூர் மக்களவைத் தொகுதி தோல்விக்கு பதில் அளித்த எடப்பாடி,   “திமுக தலைவர் ஸ்டாலின் முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பல லட்ச வாக்குகளில் வெற்றி பெற்றோம், வேலூரி லும் பல லட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கூறினார். ஆனால், 8,141 வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக வென்றுள்ளது என்று குறிப்பிட்டவர்,  வேலூர்  தேர்தலில், குடியாத்தம், அணைக்கட்டு, கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகள் பெற்றுள்ளது, இதுவே அதிமுகவுக்கு  பெரிய வெற்றி என்றுகூறினார்.

அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்கு குறைந்து விட்டதாக என்ற கேள்விக்கு,  மக்கள் யாருக்கு ஓட்டு போடுகின்றனர் என்பது ரகசியம். அதிமுகவுக்கு சிறுபான்மை மக்கள் வாக்களித்தார்களா?, பெரும்பான்மை மக்கள் வாக்களித்தார்களா என்பது எப்படி தெரியும்? யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்று தெரிவித்தார்.

தமிழகம் சாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்டது. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக விளங்குகின்றது. சாதி, மத அடிப்படையில் இங்கு அரசியல் செய்வது கிடையாது. அனைத்து மக்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறோம்” என தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதில் கூறிய முதல்வர், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும், அதில் அதிமுகவும், கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும்” என்றும் தெரிவித்தார்.

மேலும்,  “நீலகிரியில் கனமழை பெய்து வருகிறது. பந்தலூர் என்ற இடத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. கனமழையால் சிக்கிய 34 பேர் பேரிடர் மீட்புக்குழுவினர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட 5,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 15000 பேர் உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளனர். அங்கு அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் நேரில் சென்று அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

மக்களுக்கு குடிநீர், சாலை, தெரு விளக்கு,போக்குவரத்து ஆகியவற்றை சரிசெய்ய மாவட்ட ஆட்சியருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article