கிருஷ்ணகிரி:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால்,  விவசாயிகளின் வாழ்வாதாரம் முடக்கப்பட்ட உள்ளது. இதனால் டன் கணக்கில்  மல்லிகைப்பூ வீணாகி வருவதால், நாள் ஒன்றுக்கு ரூ.30லட்சம் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் ஈரோடு, மதுரை பகுதிகளிலும் மல்லிகைப்பூ விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  சாதாரணமாக, திருவிழாக்காலங்கள் மற்றும் திருமண மாதங்களின் போது,  கிலோ 500 முதல் 1,000 வரை விற்பனையாகும் மல்லிகைப்பூ தற்போது,   ஊரடங்கு உத்தரவால் திருமண நிகழ்ச்சிகள், விழாக்கள், கோயில் பூஜைகள் அனைத்தும் தடைபட்டுள்ளதால் மல்லிகைப்பூ விவசாயகிள் வரலாறு காணாத இழப்பை சந்தித்து வருகின்றனர்.

மல்லிகைப்பூ அதிகமாக விளையும்  கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், அவதானப்பட்டி, நாட்டாண்மைக்கொட்டாய், மலையாண்ட அள்ளி, வேலம்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ஆயிரக்கான ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப் பூக்கள் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இங்கு பறிக்கப்படும் பூக்கள் பெரும்பாலும், பெங்களூர் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது.

ஆனால், கொரோனாவின் தாக்கத்தால் போக்குவரத்து முடங்கிப்போன நிலையில், பூக்களை பறிக்க முடியாமலும், பறிக்கப்பட்ட பூக்களை வெளி இடங்களுக்கு அனுப்ப முடியாமலும் பாழாகி வருகிறது.  இந்த பகுதியில் இருந்து, நாள் ஒன்றுக்கு சுமார்   10 டன் பூக்களும், விழாக்காலங்களில் அதிகபட்சம் 20 டன் பூக்களும் அனுப்பி வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, ஊரடங்கு காரணமாக, அனைத்தும் வீணாகிப்போயுள்ளன.

மல்லிகைப் பூக்கள், செடிகளில் பறிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் பூக்கள் மலர்ந்து செடிகளும் வீணாகி வருகின்றன. இதனால், பூக்கள் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 டன் மல்லிகைப் பூக்கள் பறிக்கப்படாமல் செடிகளிலேயே இருந்து காய்ந்து வீணாகி வருவதாகவும், சுமார்  2 டன் பூக்கள் திருப்பத்தூர் பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள விவசாயிகள்,   சுமார் ரூ.30 லட்சத்திற்கு மேல் நாள் ஒறுக்கு இழப்பு ஏற்பட்டு ஏற்பட்டு உள்ளதாகவும், அரசாங்கம் அதற்குரிய உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.