திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் மதுபானம் வழங்க கட்டணத்துடன் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டது.

வணிக நோக்கத்துடன் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்படும் அரங்கங்களிலும் விளையாட்டு மைதானங்களிலும் மதுபானம் பரிமாற அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

இதற்காக மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மதுவிலக்குத் துறை துணை ஆணையரின் சிறப்பு அனுமதியுடன் டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து மதுபானங்கள் வாங்க உரிமம் வழங்கப்பட உள்ளது.

சர்வதேச நிகழ்வுகள், கலாச்சார விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விழாக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் இதற்காக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பிற இடங்களில் உள்ள அரங்கங்களுக்கு ரூ. 1 லட்சம், ரூ. 75,000 மற்றும் ரூ. 50,000 ஆண்டு உரிம கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் நிகழ்ச்சிக்கு ரூ. 11,000, ரூ. 7,500 மற்றும் ரூ. 5,000 உரிம கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீடுக்காகவும் வெளிநாட்டு பயணிகளின் வருகைக்காகவும் நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்திவரும் தமிழக அரசின் இந்த அரசிதழ் தமிழக மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகளில் மதுபானம் பரிமாற இந்த அரங்கங்களுக்கு அனுமதி இல்லை என்றும் சர்வதேச நிகழ்ச்சிகளில் மட்டுமே மதுபானம் பரிமாற அனுமதி என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெளிவுபடுத்தியுள்ளார்.

இருந்தபோதிலும் மதுபானம் பரிமாற உரிமம்பெறும் இந்த தனியார் அரங்கங்களுக்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுமா என்பது குறித்தும் பரிமாறாமல் தேங்கி கிடக்கும் மதுபானங்களை அரங்க உரிமையாளர்களிடம் திரும்ப பெறுவது குறித்தும் விதிகளுக்கு புறம்பாக மற்ற நிகழ்ச்சிகளில் மதுபரிமாறுவதை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழு குறித்து எந்தவொரு தெளிவான விளக்கமும் கிடைத்ததாக தெரியவில்லை.

நெகிழும் தமிழக அரசு… விஷேச நிகழ்ச்சிகளில் இனி ஒளிவு மறைவாக குடிக்க வேண்டாம்… மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதி