டில்லி

வேலை வாய்ப்பு சமூக வலைத் தளமான ‘லிங்க்ட் இன்’ இந்தி மொழியில் தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மென்பொருள் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்துக்குச் சொந்தமான லிங்க்ட் இன் என்னும் சமூக வலைத் தளம் வேலை வாய்ப்பு மற்றும் வர்த்தக தகவல்களை வழங்கி வருகிறது.   இந்த வலைத்தளத்தை அதிக அளவில் அமெரிக்காவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.  இந்தியாவில் 8 கோடியே 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த லிங்க்ட் இன் சமூக வலைத் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.   இந்த வளை தளத்தின் இந்தியப் பிரிவு நிர்வாகி அசுதோஷ் குப்தா இந்தியாவில் இதன் சேவைகளை அதிகரிக்கப் பல திட்டங்கள் தீட்டி வருகிறார்.

அதன்படி தற்போது இந்த லிங்க்ட் இன் வலைத்தளம் இந்தி மொழியில் தொடங்கப்பட்டுள்ளது.   இதன் மூலம் இந்தி பேசும் சுமார் 60 கோடி மக்கள் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.   இதுவரை உலக அளவில் 25 மொழிகளில் லிங்க்ட் இன் செயல்பட்டு வருகிறது.  விரைவில் வேறு பல மொழிகளிலும் லிங்க்ட் இன் தொடங்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.