பரிமலை

விரைவில் சபரிமலையில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் 12 மணி நேரம் இங்குள்ள அறைகளில் தங்க வசதி ஏற்படுத்த உள்ளதாக தேவசம் போர்டு தலைவர் கூறி உள்ளார்.

சபரிமலை சன்னிதானத்தில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு வரை தங்க அனுமதிக்கப்பட்டனர்.   ஆனால் தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொரோனா வழிகாட்டு நெறி முறைப்படி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 50 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்கு நிலக்கல் உள்படக் கேரளாவில் 10 பகுதிகளில் உடனடி முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

பக்தர்கள் தங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் 500க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. கொரோனா பரவல் காரணமாகக் கடந்த வருடம் முதல் சன்னிதானத்தில் உள்ள அறைகளில் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. ஐயப்பன் தரிசனம் முடிந்தவுடன் பக்தர்கள் திரும்பிச் சென்று விட வேண்டும். இதனால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட வெகு தொலைவான இடங்களில் இருந்து வரும் பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

மேலும் நெய்யபிஷேகம், பம்பா ஸ்நானம் ஆகியவையும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் வருகை குறைவுக்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளதால் மீண்டும் அந்த வசதிகளைத் தொடங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.   திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.

அப்போது அவர்,  ”சபரிமலை தரிசனத்திற்கு வருவதற்குப் பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை. ஆன்லைனில் முன்பதிவு செய்து வரவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.  நிலக்கல் உள்பட 10 இடங்களில் உடனடி முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்யாமலேயே இங்கு வந்து நேரடியாக முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம்.

மேலும் சபரிமலையில் பக்தர்களுக்குக் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. எனவே நெய்யபிஷேகத்தை பக்தர்கள் நேரடியாக நடத்துவது, தவிரப் பம்பா ஸ்நானம், சன்னிதானத்தில் பக்தர்கள் 12 மணி நேரம் தங்குவது உள்பட வசதிகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பாக அரசு விரைவில் அனுமதி அளிக்கும் என்று நம்புகிறேன். ஆன்லைன் முன்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.