லிபியாவில் ஏற்பட்ட பெருமழை காரணமாக அணைகள் உடைந்ததால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 5000 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு.

அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் மத்தியதரைக் கடலை ஒட்டிய டெர்னா நகரில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தால் பல ஆயிரக்கணக்கானோர் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அதில் ஏராளாமானோர் இறந்துபோனதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை 10000க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் 5000 பேர் வரை உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

டேனியல் புயல் காரணமாக டெர்னா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்ததை அடுத்து டெர்னா மாவட்டத்தில் உள்ள இரண்டு அணைகளில் உடைப்பு ஏற்பட்டது.

இதனால் காட்டாற்று வெள்ளம்போல் வந்த தண்ணீரில் அந்த நகர மக்கள் அனைவரும் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டனர்.

ஏற்கனவே நிலநடுக்கம் காரணமாக மற்றொரு வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோ பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வெள்ளம் காரணமாக ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தால் லிபியாவில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.