சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை  சட்டமன்றத்தில் அமைச்சர் ரகுபதி நிறைவேற்றினால் அதற்கு  ஆளுநர் ஒப்புதல் அளித்து தான் ஆக  வேண்டும், அது தான் சட்டம். அதனால் மீண்டும் அனுப்புவோம்  என்று தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களில் இணைந்து தற்கொலை செய்துள்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்திய நிலையில், தமிழக சட்டப்பேரவையில்  அவசர சட்டம் நிறைவேற்நி ஆளுநரின் ஒப்புதலுக்காக  அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், அதற்கு ஆளுநர்ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், இடையில் இந்த மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டிருந்தார். இதனையடுத்து  தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று விளக்கமளித்தார்.  இருந்தாலும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல்,  கடந்த 4 மாதங்களாக இழுத்தடித்து வந்த நிலையில், தற்போது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியும், விளக்கங்கள் கேட்டும்,  அதை மாநில அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி, “ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு சில கேள்விகளை ஆளுநர் கேட்டிருந்தார். அதற்கு விளக்கம் அளித்து விட்டோம். அதன் பிறகு இப்போதுதான் முதன் முறையாக மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.ஆளுநர். திருப்பி அனுப்பிய மசோதாவை நாங்கள் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்துதான் ஆக வேண்டும் அதுதான் சட்டம். புதிய சட்டம் இயற்றுவதற்கு உரிமை உள்ளது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது என தெரிவித்தார்.