தினகரன் அதிருப்தி அடைந்தால் அடையட்டும்!: தங்கதமிழ்செல்வன் அதிரடி பதில்

Must read

தினகரன் – தங்கதமிழ்ச்செல்வன்

டி.டி.வி.தினகரன் அதிருப்தி அடைந்தால் எதிர்கொள்ளவேண்டியதுதான் என்று அவரது தீவிர ஆதரளவாளரான தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“உள்ளாட்சி தேர்தலை மனதிலே வைத்துக் கொண்டு துணை பொதுச்செயலாளர் தினகரன் தனிக்கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருந்தால் அதில் நான் சேர மாட்டேன்” என்று அவர் தெரிவித்ததுதான் இதற்குக் காரணம்.

இந்த நிலையில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த தங்தமிழ்ச்செல்வன்,  தங்கள் இருவருக்கும் இடையே எந்தவித கருத்துவேறுபாடும் இல்லை என்று  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
“ தினகரனுக்கும், எனக்கும்  இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக சிலர் தவறான தகவலை பரப்புகிறார்கள். எங்கள் இருவருக்கிடையே எந்தவித  கருத்து வேறுபாடும் கிடையாது. உள்ளாட்சி தேர்தலை மனதிலே வைத்துக் கொண்டு துணை பொதுச்செயலாளர் தினகரன் தனிக்கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருந்தால் அதில் நான் சேர மாட்டேன் என்று நான் சொன்னது உண்மைதான்.

ஏனெனில் நான் அடிப்படையில் அ.தி.மு.க. உறுப்பினர். அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றிருக்கிறேன்.

ஆகவே அ.தி.மு.க.வை விட்டு வேறு கட்சியில் நான் சேர்ந்தால் கட்சி தாவல் தடை சட்டத்தின்படி எம்.எல்.ஏ. பதவி பறிபோய்விடும். இது அனைவருக்கும்  தெரிந்த வி‌ஷயம்தான்” என்றார்.
“ நீங்கள்  வெளிப்படையாக  பேசுவதால் உங்கள் மீது தினகரன் அதிருப்தி அடைந்துவிட மாட்டாரா?” என்ற கேள்விக்கு, “அதிருப்தி ஏற்பட்டால் அதை சந்திக்க வேண்டியதுதான்” என்றார்.

“18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சபாநாயகரின் நடவடிக்கை சரிதான் என்று தீர்ப்பு வருமானால் உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?” என்ற கேள்விக்கு பதில் அளித்த தங்கதமிழ்ச் செல்வன், “ முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று கவர்னரிடம் மனு கொடுத்தோம். அதற்காக  எங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்து 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறித்து விட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.  அடுத்த மாதத்திற்குள் தீர்ப்பு வந்து விடும்.

18 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று தீர்ப்பு வந்தால் அதை எதிர்த்து நாங்கள் அப்பீல் செய்ய மாட்டோம். 18 தொகுதியிலும் இடைத்தேர்தல் வரும். அதில் மீண்டும் போட்டியிடுவோம்.

ஒருவேளை தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தால் மறுபடி சட்டசபைக்கு சென்று மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுப்போம்.
நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியும் பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த அரசை ஆதரித்து வாக்களித்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்கிறார்கள். இவர்களிடம் என்ன ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையிலேயே தைரியம் இருந்தால் எங்களை கட்சியை விட்டு நீக்க வேண்டியது தானே” என்று தங்கதமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

More articles

Latest article