டில்லி

நாட்டில் 29 மாவட்டங்களில் முதல் டோஸ் கொரோனா ஊசி போட்டோர் குறைவாக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் 2 ஆம் அலை ஓய்ந்துள்ள வேளையில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.   இது வழக்கமான கொரோனா வைரஸை விடப் பன்மடங்கு வேகமாக பரவக் கூடியது எனவும் அதிகம் அபாயகரமானது எனவும் கூறப்படுகிறது.   இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி மூலம் ஒமிக்ரான் உயிரிழப்பைத் தடுக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று மத்திய அரசின் சுகாதாரத்துறை ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.   அதில் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 50%க்கும் குறைவாக உள்ள மாவட்டங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.   அதன்படி நாட்டில் 29 மாவட்டங்களில் இன்னும் 50% க்கும் குறைவாக முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் உள்ளனர்.

இதில் 26 மாவட்டங்கள் வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ளன.  மிகக் குறைந்த அளவாக 18.3% பேர் மணிப்பூர் மாநிலம் கங்போக்பி மாவட்டத்தில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அடுத்ததாக அருணாசலப் பிரதேசம் கிரா தாதி மாவட்டத்தில் 18.8% முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.  அடுத்ததாக நாகாலாந்தின் கிபைர் மாவட்டத்தில் 22%, டியூன்சங்க் மாவட்டத்தில் 22.2% மணிப்பூரின் உகுருல் மாவட்டத்தில் 22.4% மட்டும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

அதிக பட்சமாக மேகாலயா மாவட்டத்தின் தெற்கு கரோ மலை மாவட்டத்தில் 49.1%, ஜார்க்கண்ட் மாநில பாகுர் மாவட்டத்தில் 48.8% பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.  மூன்றாவதாக அசாம் மாநில தெற்கு சல்மாரா மன்கசார் மாவட்டம் 47.9%, நான்காவதாக மேகாலயா மாநில கிழக்கு கரோ மலை மாவட்டம் 46.7%, ஐந்தாவதாகத் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் 45.9% என உள்ளன.