பாட்னா:

பீகார் மாநிலத்தில் ஜனவரி மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.


தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் தொழுநோய் கண்டறியும் முகாம், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் பீகார் மாநிலத்தின் 38 மாவட்டங்களில் நடந்து வருகிறது.

கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 2 கோடி மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 50 ஆயிரம் பேருக்கு தொழுநோய் இருப்பதற்கான அறிகுறி தென்படுவதாக சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் பிஜோய் குமார் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் முழுமையான விவரம் தெரியவரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பலர் ஒரு அறையில் வசிப்பதும், ஒரே படுக்கையில் பலர் படுப்பதும் தொழுநோய் அதிக அளவில் பரவியதற்கான காரணமாக இருக்கலாம் என சமூக சுகாதார ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.