புதுடெல்லி:
ந்திய நீர்மூழ்கி கப்பல் பற்றிய ரகசிய ஆவனங்கள் கசிந்ததாக வெளியான தகவல் பற்றி மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.
பிரான்சிலிருந்து  வாங்கப்பட்ட ‘ஸ்கார்பின் நீர்மூழ்கி கப்பல்’ குறித்த ரகசிய ஆவனங்கள் வெளியான தகவல் குறித்து  விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு கடற்படைத் தலைமைத் தளபதிக்கு  இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவுக்காக பிரான்ஸ் நிறுவனம் வடிவமைத்த “ஸ்கார்பின்’ நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான 22,400 பக்க ரகசிய ஆவணங்கள் வெளியானது பற்றி பரபரப்பான தகவல்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன.
இந்த ரகசிய  ஆவணங்களில் கப்பலின் திறன், வடிவமைப்பு, அதன் தொழில்நுட்பத் தகவல்கள்  அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் “தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகையில் இது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. மேலும் ,  ரகசிய ஆவணங்கள் இந்தியத் தரப்பில் இருந்துதான் கசிந்துள்ளன என்பதால் பிரான்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் பிரச்னை ஏற்படாது என்றும்  “தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நீர்மூழ்கி கப்பல் ரூ.23,500 கோடி மதிப்பிலானது.  இந்தியாவுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.  இதற்கான ஒப்பந்தம் 2011ம் ஆண்டு  போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
scorpene1
இதுகுறித்து,  பேசிய இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் :
இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி, எந்த வகையிலான தகவல்கள் கசிந்துள்ளன?. அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்பது குறித்து முழுமையாக அறிக்கை அளிக்குமாறு கடற்படைத் தலைமைத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளேன். இணையதள ஊடுருவல் மூலம் இந்தத் தகவல் திருட்டு நடைபெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். விரைவில் அனைத்து உண்மைகளும் வெளிவரும். நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான 100 சதவீத தகவல்களும் கசிந்திருக்கும் என்று சந்தேகிக்க வில்லை என்றார்.
இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என,  இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்ட்ரே சைக்லர், பெங்களூரில்  கூறினார்.
மேலும்  நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் கசிந்திருப்பதை மிகவும் தீவிரமான பிரச்னையாக பிரான்ஸ் கருதுகிறது. கசியவிடப்பட்டுள்ள ஆவணங்களில் உள்ள தகவல்களின் முக்கியத்துவம், அவற்றின் தீவிரத்தன்மை உள்ளிட்டவை குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கு வெளிப்படைத்தன்மையுடன் கூடிய முழு ஒத்துழைப்பை பிரான்ஸ் வழங்கும் என உறுதியளிக்கிறேன் என்றார் அவர்.