சென்னை: தமிழக அரசு போக்குவரத்து சங்க ஊழியர்கள் வரும் 9ந்தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில்,  பேருந்து ஸ்டிரைக் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறைஅமைச்சர் சிவசங்கர், பேருந்து  ஸ்டிரைக் நடந்தாலும்  பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் ஆட்சியாளர்கள் போதுமான அளவு பணியாளர்களை நிமிக்காததாலும், இலவச பேருந்துகள் இயக்குவதாலும் ஊதியம் கொடுக்க வழியில்லாமல் போக்குவரத்து கழகம் திண்டாடி வருகிறது. போதுமான ஊழியர்கள் இல்லாததால் பணிச்சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, புதியதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு கிராஜுவிட்டியை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து  ஊழியர்கள்  கடந்த சில  ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

கடந்த  2021  சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டு நிலுவையிலுள்ள அகவிலைப்படி உயர்வைக் கணக்கிட்டு முழுமையாக வழங்கு வோம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்றெல்லாம் திமுக தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. ஆனால் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பின்னர் இவை நிறைவேற்றப்படவில்லை.

 இது குறித்து போக்குவரத்து சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், “போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் 1,30,000 தொழிலாளர்களுக்கு கடந்த 01.09.2023 அன்று முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை இதுவரை தமிழ்நாடு அரசு தொடங்கவில்லை. மேலும், கடந்த 2015 ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள 90,000 ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியும் இதுவரை அரசால் வழங்கப்படவில்லை இதர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை என்பதோடு, பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுவதும் அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, காலியாகவுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களும் நிரப்பப்படாததோடு, பேருந்து சேவைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மகளிருக்கான இலவசப் பேருந்து சேவையால் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் நட்டத்தையும் தமிழ்நாடு அரசு ஈடுசெய்வதில்லை. போக்குவரத்து தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியும் அரசால் செலவிடப்பட்டுள்ளது.

ஐடியு தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் சௌந்தரராஜன் கூறுகையில், “நாங்கள் வேலை நிறுத்தம் அறிவித்தவுடன் அரசு பேச்சு வார்த்தைக்கு முன்வந்தது. இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. ஆனால் எங்களின் கோரிக்கைகள் குறித்து அரசிடம் எந்த பதிலும் இல்லை. அமைச்சர் பொங்கல் வரை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். நாங்கள் கடந்த 8 ஆண்டுகளாக பொறுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். எனவே இந்த பொங்கலாவது போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பான பொங்கலாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்திருந்தார். பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், “போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனில் கூடுதல் நிதி செலவாகும். எனவே மாநில நிதியமைச்சகத்திடம் கலந்தாலோசித்து முடிவு தெரிவிக்கப்படும். அதற்கு ஒருநாள் அவகாசம் கேட்கப்பட்டிருக்கிறது. நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்” என்று கூறினார்.

மேலும், தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தினாலும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மக்கள் எந்ததொரு சிரமமும் இல்லாமல் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும்  தெரிவித்தார்.

பின்னர் பேசிய தொழிற்சங்க நிர்வாகிகள், “பேச்சுவார்த்தை மூலம் நல்ல முடிவை எட்ட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நாளை மறுநாள் வரை அமைச்சரின் பதிலுக்காக காத்திருக்கிறோம். அமைச்சரிடமிருந்து பதில் வரும் வரை எங்களின் வேலை நிறுத்த போராட்ட முடிவு தொடரும்” என சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

இதற்கிடையில்,  போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்திற்கு தடை கோரி வழக்கு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்த காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு  செய்யப்பட்டு உள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பது சட்டவிரோதம்  என்றும், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையீடு நாளை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.