டெல்லி: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்த அறிவிப்புகள் வெளியான நிலையில்,  தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு வழங்கிய அனுமதியை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை  அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்களை  அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு  செய்யப்பட்டு உள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக கூறி, பீட்டா அமைப்பு நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்குகளை  தாக்கல் செய்து, ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கேட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிகட்டு போட்டி அனுமதி சட்டத்துக்கு குடியரசு தலைவர் வரை ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், கடந்த  ஆண்டு   மே மாதம் 18ம் தேதி அன்று உச்சநீதிமன்றமும், தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு அனுமதி வழங்கி  வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

 ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் திருத்த சட்டம் உள்நோக்கத்துடன் இயற்றப்பட்டது அல்ல எனவும் இதுபோன்ற சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உளது எனவும் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் திருத்த சட்டம் விலங்கு வதையை குறைப்பதாகவும், ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பண்பாட்டை காக்க உதவுமா என்பது குறித்தான விவாதங்கள் சட்டப்பேரவைக்குள் விவாதிக்க வேண்டியதே தவிர அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கேள்வி எழுப்பி விசாரிக்குமாறு கேட்க முடியாது எனவும் தமிழ்நாடு பண்பாட்டின் அங்கமாக ஜல்லிக்கட்டு இருந்து வருகிறது என சட்டப்பேரவை தீர்மானித்து சட்டம் இயற்றப்பட்டுவிட்டதால் சட்டப்பேரவை நோக்கத்தை நீதிமன்றம் இடையூறு செய்யப்போவதில்லை எனவும் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை உறுதி செய்து செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பீட்டா அமைப்பு கடந்த ஜூலை மாதம் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு நீண்ட நாட்களாக விசாரிக்காமல் இருப்பதால் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற முறையீடு உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் குறித்து பட்டியலிடுவதை குறித்து முடிவெடுக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.