சென்னை

சென்னை நகரில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்கத் தாமதம் ஆவதால் ஆம்புலன்சிலேயே நோயாளிகள் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இதில் சென்னை நகர் முதலிடத்தில் உள்ளது.   சென்னையில் ராஜீவ்காந்தி அரசு  பொது மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளில் 4368 படுக்கைகள் உள்ளன.   இதுவரை 90%க்கும் மேல் படுக்கைகள் நிரம்பி உள்ளன.

சென்னையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனடியாக படுக்கை வசதிகள் கிடைப்பதில்லை.  அத்துடன் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகளும் அழைத்து வரப்படுகின்றனர்.  இதையொட்டி சுமார் 4 மணி நேரம் வரை நோயாளிகள் ஆம்புலன்சிலேயே காத்திருக்க நேரிடுகிறது.

தமிழக அரசு அடுத்த 10 நாட்களில் 3000 படுக்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.   சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கூடுதலாக 400 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  கொரோனா நோயாளிகளை அரசு மருத்துவமனைகளில் இருந்து அங்கு மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன.  அதுவரை மக்கள் காத்திருப்பது அவசியமாகி உள்ளது.